வாசக மறையுரை (செப்டம்பர் 02)

பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I கொரிந்தியர் 4: 1-5
II லூக்கா 5: 33-39
“யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்”
புனித நிக்கோலாசும் மூன்று பெண்களும்:
ஆர்ஸ் நகரில் புனித ஜான் மரிய வியான்னி பங்குப் பணியாளராக இருந்தபோது அங்கிருந்த ஒருசிலர் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசி, அவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த ஜான் மரிய வியான்னி மிகவும் வருந்தினார்.
இதையடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில், மறையுரையின்போது, அவர், ஆயரான புனித நிக்கோலாசின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னார். புனித நிக்கோலாஸ் ஆயராக இருந்த இடத்தில் ஏழை ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வரதட்சணை கொடுத்துக் கட்டிக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த ஆயர் நிக்கோலாஸ் ஒருநாள் நள்ளிரவில் மூன்று தங்கப் பந்துகளை எடுத்துக்கொண்டு, அந்த ஏழையின் வீட்டில் இருந்த சன்னல் வழியாக வீசிவிட்டு வந்துவிட்டார்.
மறுநாள் காலையில், மூன்று தங்கப் பந்துகள் தன்னுடைய வீட்டிற்குள் கிடப்பதைப் பார்த்த அந்த ஏழை மிகவும் மகிழ்ந்து, அவற்றைக் கொண்டு தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு, ஜான் மரிய வியான்னி மறையுரையைக் கேட்டுக் கொண்டிருந்த இறைமக்களிடம், “புனித நிக்கோலாஸ், அந்த ஏழையின் வீட்டிற்கு நள்ளிரவில் எதற்காகப் போனார் என்பது தெரியவில்லை என்றால், அவரைப் பற்றி மக்கள் தவறாகத்தான் நினைக்கக்கூடும். அதைப் போன்றுதான் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிப் தீர்ப்பிடுவது முறையில்லை” என்று சொல்லி முடித்தார். இதனால் ஆர்ஸ் நகரில் மற்றவரைப் தீர்ப்பிடும் போக்கு படிப்படியாகக் குறைந்தது.
ஒருவரைப் பற்றித் தீர்ப்பிடுவதற்கு நமக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கொரிந்து நகர் மக்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றிய பவுல், அவர்கள்முன் தன்னைப் பெரியவராகக் காட்டிக்கொள்ளவில்லை; பெரியவராகவும் அழைக்கப்பட விரும்பவில்லை. சாதாரண ஒரு கடவுளின் ஊழியராகவே அவர் அழைக்கப்பட விரும்பினார். அதே நேரத்தில் அவர் மக்கள் நீதிமன்றம் தன்னைப் பற்றித் தீர்ப்பளித்தால் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்றும், தான் யாரையும் தீர்ப்பிடப்போவதில்லை என்றும், ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றார்.
பவுல் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதால்! நற்செய்தியில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம், யோவானின் சீடரும் பரிசேயர்களின் சீடரும் நோன்பிருக்க, உம்முடைய சீடர் உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றார்களே! என்கிறார்கள்.
யூதர்கள் ஆண்டுக்கொருமுறை பாவக் கழுவாய் நாளில் நோன்பிருந்தார்கள் (இச 16: 29-31) இன்னும் ஒருசில தேவைகளுக்காக அவர்கள் நோன்பிருந்தார்கள். ஆனால், அது கட்டாயம் இல்லை. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று அவரிடம் சொல்வது, அவர்களைக் கட்டாயப்படுத்தவது போன்று இருக்கின்றது, அல்லது அவர்கள் நோன்பிருக்காததால் சீடர்களே அல்ல என்று தீர்ப்பிடுவது போன்று இருக்கின்றது. இதனால் இயேசு அவர்களுக்குச் சரியான விளக்கம் தந்து அவர்களை வாயடைக்கின்றார்.
பக்தி முயற்சிகளை மேற்கொள்வது அவரவர் விருப்பம். அப்படி இருக்கையில், அதைச் செய்யாதவர்களை மிகப்பெரிய பாவிகள் போன்று தீர்ப்பிடுவது குற்றம். இந்த உண்மையை உணர்ந்து, கடவுளை நாம் உண்மையாய் வழிபடுவோம், யாரையும் தீர்ப்பிடாதிருப்போம்.
சிந்தனைக்கு:
கடவுள் பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றார்.
ஒருவரிடம் எதையும் வலிந்து திணிப்பது தவறு.
நம்மைப் பற்றியே நமக்கு முழுமையாகத் தெரியாதபோது, மற்றவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அதனால் பிறரைத் தீர்ப்பிடுவது குற்றம்.
இறைவாக்கு:
‘…போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருந்துங்கள்’ (பிலி 4: 😎 என்பார் புனித பவுல். எனவே, நாம் அல்லதை விட்டுவிட்டு நல்லதைப் பற்றிக்கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.