வாசக_மறையுரை (ஆகஸ்ட் 16)

பொதுக் காலத்தின் இருபதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I எசேக்கியேல் 28: 1-10
II மத்தேயு 19: 23-30
“உன் பெருமையைக் குலைப்பர்”
மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை:
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority) தொலைபேசி உரையாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது எனக் கண்டறிய முடிவு செய்தது. அதற்காக ஆணையம், ஐந்நூறு தொலைபேசி உரையாடல்களைத் தேர்ந்தெடுத்தது.
ஆய்வின் முடிவில், ‘நான்’ என்ற வார்த்தைத்தான் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை ஆணையம் அறிந்து வியந்து போனது. ஐந்நூறு தொலைபேசி உடையாடல்களில் 3900 முறை ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது வியப்புக்குரிய செய்திதானே!
ஆம், இன்று பலரும் ‘நான்’ என்ற இறுமாப்பில், பெருமையில் இருப்பதைக் காண முடிகின்றது. இவர்களுடைய முடிவு எப்படி இருக்கும்? தாழ்ச்சியோடு ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் எத்தகைய கைம்மாறு பெறுவர்? என்பன பற்றி இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘இராணுவத்தால் அழிந்தவர்களை விடவும் ஆணவத்தால் அழிந்தவர்கள் மிகுதி’ என்ற சொல்வழக்கு உண்டு. இதற்கு அப்படியே பொருந்திப் போகிறவன்தான் தீர் நகரின் மன்னன். இவன் நானே கடவுள் என்றும், கடவுள்போல் அறிவாளி என்றும் சொல்லிக்கொண்டான். இதனால் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலை அழைத்து, அவனுக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் சொல்கின்றார். எசேக்கியேலும் ஆண்டவர் தன்னிடம் சொன்னது போன்று, “அன்னியர் உன் பெருமையைக் குலைப்பர்” என்று அவனிடம் கூறுகின்றார்..
இங்கே குறிப்பிடப்படும் தீர் நகர் மன்னனைப் பாபிலோனை ஆண்ட நெபுகத்னேசரோடும்; ஏன், ஆணவத்தோடு, பணத் திமிரோடு அலையும் ஒவ்வொருவரோடும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இவர்கள் தங்களிடம் இருந்த பணமும் அதிகாரமும் பெரிதென நினைத்து ‘நான்’ என்ற ஆணவத்தில் வாழ்வதால் இவர்களின் அழிவு மிகக் கொடியதாகவே இருக்கும்.
நற்செய்தியில் இயேசு, ‘செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்” என்கிறார். ஏனெனில், இவர்கள் தங்களிடம் உள்ள பணத்தைப் பெரிதெனக் கருதி, கடவுளையும் சக மனிதர்களையும் பின்னுக்குத் தள்ளி வாழ்வதால் இவர்களால் ஒருகாலமும் விண்ணரசில் புக முடியாது. இதற்கு முற்றிலும் மாறாக, இயேசுவின் சீடர்களைப் போன்று அவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடந்தால், நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்வது போல் மிகுந்த கைம்மாறு பெறுலாம்.
எனவே, நாம் ‘நான்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆண்டவர் தாம் எல்லாம், என அவரைப் பின்பற்றி நடந்து, மிகுந்த கைம்மாறு பெறுவோம்.
சிந்தனைக்கு:
ஆணவம் இருக்கும் இடத்தில் ஆண்டவர் இருக்க வாய்ப்பில்லை.
தலைக்கனத்தால் வீழ்ந்தோர் பலர்; தாழ்ச்சியினால் யாரும் வீழ்ந்ததாக வீழ்ந்ததாக வரலாறு இல்லை.
பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்ந்து வருவது போல, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை நோக்கி ஆண்டவரின் அருள் பாய்ந்து வருகின்றது.
இறைவாக்கு:
‘அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை’ (நீமொ 16:18) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் அகந்தையை அகற்றி, ஆண்டவரை நம் உள்ளத்தில் குடியமர்த்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.