திருத்தந்தை மன்னிப்பு கேட்டது குறித்து கனடா பிரதமர்

கனடாவின் பூர்வீக இனத்தவருக்கு, அக்கால கத்தோலிக்கத் திருஅவை கொடுத்த துயரங்களுக்காக, Alberta மாநிலத்தின் Maskwacîsவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மக்களைச் சந்தித்தபோது மன்னிப்பு கேட்டு, ஒப்புரவு மற்றும் குணப்படுத்தலுக்கு அழைப்புவிடுத்ததைக் குறித்து, கனடாவின் பிரதமர் Justin Trudeau அவர்களும், தலைமை ஆளுனர் Mary Simon அவர்களும் தனித்தனியே தங்களின் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளனர். அவை அவர்களின் இணையதளப் பக்கங்களில் வெளியிடப்பபட்டுள்ளன.

அக்காலத்தில் பல கிறிஸ்தவர்களால், பூர்வீக இனத்தவர் விடுதிப் பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்காக, அப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்களிடம் திருத்தந்தை மன்னிப்புக் கேட்டுள்ளார். 1,50,000த்துக்கும் மேற்பட்ட பூர்வீக இனங்களின் சிறார் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுதிப் பள்ளிகளில் வைக்கப்பட்டனர். இவர்களில் பலர், உடல், மனம், உணர்வு, மற்றும், பாலியல் ரீதியில் கடும் உரிமை மீறல்களை எதிர்கொண்டனர். இத்தகைய வேதனைக்குரிய பள்ளி அமைப்பின் மரபு இன்றும் இருக்கின்றது. தற்போது கத்தோலிக்கத் திருஅவையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வினத்தவரின் மனக்காயங்களைக் குணப்படுத்தி, அவர்களோடு ஒப்புரவாகும் நடவடிக்கைக்கு கனடா அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும். இன்னும், உண்மை மற்றும் ஒப்புரவு பணிக்குழுவின் திட்டத்தை அரசு முழுமையாய்ச் செயல்படுத்தும். ஒப்புரவு ஏற்படுத்துவது, கனடாவின் அனைத்து மக்களின் பொறுப்பாக உள்ளது. கடந்த காலத்தில் மாணவர் விடுதிப் பள்ளிகளில் நடந்ததை எவராலும் மறக்க முடியாது. இதுபோல் இனியும் கனடாவில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்போம். பூர்வீகஇனத்தவர் மற்றும், கனடா நாட்டினர் அனைவருக்கும், ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் உணர்வில், சிறந்ததொரு வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம். இவ்வாறு கனடா பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். நாமும் நம் சமுதாயங்களில் இதே பணியை மேற்கொள்வோம்.

Comments are closed.