ஜூலை 21 : நற்செய்தி வாசகம்

விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
“கடவுளைப் புறக்கணித்த மக்கள்”
பொதுக் காலத்தின் பதினாறாம் வாரம் வியாழக்கிழமை
i எரேமியா 2: 1-3, 7-8, 12-13
II மத்தேயு 13: 10-17
“கடவுளைப் புறக்கணித்த மக்கள்”
தந்தையும் மகனும்:
யூதர்களின் மிஸ்னாவில் இடம்பெறும் கதை இது.
டேரா என்றொரு யூதர் இருந்தார். இவர் தெய்வச் சிலைகளைச் செய்து, அவற்றை விற்பனை செய்து வந்தார். இவருக்கு ஆபிரகாம் என்றொரு மகன் இருந்தான். அவனுக்குத் தன் தந்தை செய்து வந்த தொழில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஒருநாள் நண்பகல் வேளையில் டேரா தன் மகன் ஆபிரகாமிடம், “சிறிது நேரம் கடையைப் பார்த்துக்கொள். அப்பா சாப்பிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடையை அவனுடைய பொறுப்பில் விட்டுவிட்டு, சற்றுத் தொலைவில் இருந்த வீட்டிற்குச் சாப்பிடச் சென்றார்.
அந்த நேரம் பார்த்து ஒருவர் கடைக்கு வந்தார். அவர் தனது கையில் ஒரு தெய்வச் சிலையை வைத்திருந்தார். கடையில் இருந்த ஆபிரகாமிடம் அவர், “என்னிடம் இருக்கும் இந்தச் சிலையால் எந்தவொரு நன்மையும் எனக்கு ஏற்படவில்லை. அதனால் இதை வைத்துக்கொண்டு வேறொரு சிலையைத் தா” என்றார். அதற்கு ஆபிரகாம் அவரிடம், “உங்களுக்கு இந்தச் சிலையால் மட்டுமல்ல, எந்தச் சிலையாலும் நன்மை ஏற்படாது. கடவுள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு ஏற்படும்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஆபிரகாம் கடைகளில் இருந்த சிலைகளையெல்லாம் கீழே தள்ளி, உடைக்கத் தொடங்கினான். இதனால் கடைக்கு வந்தவர் பதறியடித்து ஓடினார்.
சற்று நேரத்தில் சாப்பிடச் சென்றிருந்த டேரா திரும்பி வந்தபோது, கடையில் இருந்த சிலைகளெல்லாம் உடைந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “இதை யார் உடைத்துப் போட்டது?” என்று சீறினார். ஆபிரகாம் மிகவும் சாதாரணமாக, கடையில் இருந்த ஒரு பெரிய சிலையைச் சுட்டிக் காட்டி, “இந்தச் சிலைதான் மற்ற சிலைகளை உடைத்துப் போட்டது” என்றான். இதைக் கேட்டதும் திகிலடைந்த டேரா அங்கிருந்து ஓடிப்போனார்.
இந்த நிகழ்வில் வரும் தந்தை கடவுளை மறந்து, பிற தெய்வங்களை பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரது மகன் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தது, நாமும் கடவுளைப் புறக்கணிக்காமல், அவர்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. இன்றைய இறைவார்த்தை, கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவரது குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுளுக்கு இஸ்ரயேல் மக்கள் அறுவடையின் முதற்கனியாய் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், மற்ற எல்லா மக்களைவிடவும் இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தம் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார் (இச 7:7) இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் கடவுளின் குரலைக் கேட்டு, அவரை அன்பு செய்திருக்கவேண்டும். அவர்களோ அவரைப் புறக்கணித்து, வேற்று தெய்வத்தை வழிபட்டார்கள். இப்படிப்பட்ட மக்களிடம் இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கு உரைக்க அனுப்பப் படுகின்றார். இது பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
நற்செய்தியில், இயேசு கண்ணிருந்தும் காணாமலும், காதிருந்தும் கேளாமல் இருந்த மக்களைக் கடிந்துகொள்கின்றார். இறைவாக்கினர் எசாயாவின் நூலில் இடம்பெறும் மேலே உள்ள வார்த்தைகளைத் (எசா 6:9) தனது போதனையில் கையாளும் இயேசு, மக்கள் கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்காமல் போனதாலேயே அவர்கள் நலம் பெறாமல் போனார்கள் என்கிறார்.
கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுப்பது முக்கியம். ஏனெனில், அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17). இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிமடுத்திருந்தால், அவர்கள் பிற தெய்வங்களுக்குப் பின்னால் சென்றிருக்க மாட்டார்கள். அழிவையும் சந்தித்திருக்கமாட்டார்கள். அதனால் நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவரைப் புறக்கணிக்கின்ற யாரையும் ஆண்டவர் புறக்கணிக்கின்றார்.
 வாழ்விற்கு ஊற்றானவரைப் பற்றிக்கொள்வோம். ஏனெனில், அவர் ஒருவரால் மட்டுமே நமது வாழ்விற்கு வளம் சேர்க்க முடியும்.
 இயேசுவால் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
இறைவாக்கு:
‘நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது’ (விப 20: 1-3) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குச் செவிசாய்த்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.