இன்றைய புனிதர் புனிதர் போனிஃபேஸ் ✠ (St. Boniface)

புனிதர் போனிஃபேஸ் ✠
(St. Boniface)
பேராயர்/ ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர்/ மறைசாட்சி:
(Archbishop of Mainz/ Apostle of the Germans/ Martyr)
பிறப்பு: கி.பி. 675
கிரெடிடன், டெவன்
(Crediton, Devon)
இறப்பு: ஜூன் 5, 754 (வயது 79)
டோக்கும் அருகே, ஃப்ரிஸியா
(Near Dokkum, Frisia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
முக்கிய திருத்தலம் :
ஃபுல்டா பேராலயம்
(Fulda Cathedral)
நினைவுத் திருநாள்: ஜூன் 5
பாதுகாவல்:
ஃபுல்டா, ஜெர்மானியா, இங்கிலாந்து
(Fulda, Germania, England)
“வின்ஃப்ரிட்” (Winfrid) அல்லது “வின்ஃப்ரித்” (Wynfrith) எனும் திருமுழுக்கு பெயர் கொண்ட புனிதர் போனிஃபேஸ், “ஆங்கிலோ-சாக்ஸன் இங்கிலாந்து” (Anglo-Saxon England) நாட்டின் “வெஸ்செக்ஸ்” (kingdom of Wessex) அரசில் பிறந்து, “ஃபிராங்கிஷ்” (Frankish Empire) பேரரசின் ஜெர்மானிய பிரதேசங்களில் எட்டாவது நூற்றாண்டில் “ஆங்கிலோ-சாக்ஸன் மறைப்பணி” (Anglo-Saxon mission) ஆற்றிய முன்னணி கிறிஸ்தவ துறவி ஆவார்.
ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர் (Apostle of the Germans) என அறியப்படும் இவர், “ஆங்கிலேய பெனடிக்டைன் துறவி” (English Benedictine monk) ஆவார். தம்மை தேடி வந்த மடாதிபதி பதவியைத் துறந்த இவர், ஜெர்மானிய பழங்குடி மக்களின் கிறிஸ்தவ மன மாற்றத்திற்காக தமது வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தார்.
கிறிஸ்தவ மரபுவழி மற்றும் திருத்தந்தையின்மீது கொண்ட விசுவாசம் ஆகிய பண்புகளில் இவர் தனித்து நின்றார்.
மதிப்பும் வசதி வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில் பிறந்த வின்ஃப்ரிட் தமது தந்தையின் விருப்பங்களுக்கு மாறாக, சிறு வயதிலேயே தமது வாழ்க்கையை துறவறத்திற்கு அர்ப்பணித்தார். அருகாமையிலுள்ள பெனடிக்டைன் துறவியர் மடத்தில் சேர்ந்து இறையியல் கல்வி கற்றார்.
தமது 30 வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், இலத்தீன் மொழியின் இலக்கண உரை எழுதினர். கி.பி. 716ம் ஆண்டு, இவரது மடாதிபதியான “வின்பெர்த்” (Wynberth of Nursling) என்பவர் மரித்ததால் இவர் அப்பதவியை ஏற்க அழைக்கப்பட்டார். ஆனால் இந்த நிலைப்பாட்டை நிராகரித்த வின்ஃப்ரிட், மறை பணிகளுக்காக “ஃபிரிசியா” (Frisia) மற்றும் “ஜெர்மானியா” (Germania) நாடுகளை நோக்கி விரைந்தார்.
முதலில் அவர் “யூட்ரெச்ட்” (Utrecht) நாடு சென்றடைந்தார். அங்கே, கி.பி. 690ம் ஆண்டு முதல் மறைபணியாற்றிய “ஃபிரிசியர்களின் அப்போஸ்தலர்” (Apostle of the Frisians) என்றழைக்கப்படும் “வில்லிபிரார்டை” (Willibrord) சந்தித்தார். ஒரு வருடம் அங்கே தங்கிய வின்ஃப்ரிட், கிராமப்புறங்களில் மறை போதனை பணியாற்றினர். ஆனால், அக்காலத்தில், “சார்ள்ஸ் மார்ட்டேல்” (Charles Martel) மற்றும் “ஃபிரிசியா” அரசனான (King of the Frisians) “ராட்பாட்” (Radbod) ஆகிய அரசர்களிடையே நடந்த போரினால் இவர்களாற்றிய மறைபணி வெற்றியடையவில்லை.
சரியாக ஒரு வருடத்தின் பிறகு பெருநிலப்பகுதிக்கு திரும்பிய வின்ஃப்ரிட், நேராக அங்கிருந்து ரோம் நகர் சென்றார். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி (Pope Gregory II) இவரது பெயரை “போனிஃபேஸ்” என்று மாற்றினார். ஜெர்மானியாவின் மறைபணிகளுக்கான ஆயராக (Missionary Bishop for Germania) இவரை நியமித்தார். ஜெர்மனியில் உள்ள ஹெஸ் (Hess) என்ற பகுதிக்கு சென்றார். திருச்சபையின் நிறுவனங்களோ, மறைமாவட்டங்களோ இல்லாத பிரதேசத்துக்கு ஆயரானார். அதன்பின்னர் அவர் எப்போதுமே இங்கிலாந்து நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. ஆனால் அவர் தனது வாழ்நாளில் தமது நாட்டு மக்களோடும் உறவினர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண்டோடு அழிக்க போனிஃபேஸ் முடிவு செய்தார். ஒருமுறை மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஒரு வளர்ந்த ஓக் மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத்தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4 துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வரப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர்.
எந்த வித ஆபத்தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவுக்குள் மனம் மாறினார்கள். அங்கே சிறு தேவாலயத்தைக் கட்டி, அதனை புனிதர் பேதுருவுக்கு (Saint Peter) அர்ப்பணித்தார். இச்சிற்றாலயம், “ஃபிரிட்ஸ்லர்” (Fritzlar) மாநிலத்தில் கிறிஸ்தவ துறவற பணிகளுக்கான ஆரம்பமாக இருந்தது. பாகனிசம் (Paganism) இதனால் இங்கே இவரால் தனி ஒரு மனிதரால் வேரறுக்கப்பட்டது.
“ஃபிராங்கிஷ்” (Frankish) மேயர்களின் ஆதரவு போனிஃபேஸுக்கு அவசியமாக இருந்தது. 723ம் ஆண்டு முதல் போனிஃபேஸ் அரசன் “சார்ள்ஸ் மார்ட்டேலின்” (Charles Martel) பாதுகாப்பில் இருந்தார்.
கி.பி. 732ம் ஆண்டு, போனிஃபேஸ் இரண்டாம் முறையாக ரோம் பயணித்தார். இம்முறை, திருத்தந்தை மூன்றாம் கிரகோரி (Pope Gregory III) இவரை முழு ஜெர்மானிய பிராந்தியத்துக்கும் பேராயராக நியமித்தார். போனிஃபேஸ் ஆயிரக்கணக்கான மக்களை திருமுழுக்கு அளித்து மனம் மாற்றினார்.
கி.பி. 737–38ம் ஆண்டுகளில், போனிஃபேஸின் மூன்றாவது ரோம் பயணத்தின்போது, இவர் ஜெர்மனிக்கான திருத்தந்தையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவரது மூன்றாவது ரோம் பயணத்தின் பின்னர், அரசன் சார்ள்ஸ் மார்ட்டேல் (Charles Martel) பவேரியாவில் (Bavaria) “சல்ஸ்பர்க்”, “ரெஜென்ஸ்பர்க்”, ஃப்ரெய்சிங்”, மற்றும் “பஸ்சாவு” (Salzburg, Regensburg, Freising, and Passau) ஆகிய நான்கு மறைமாவட்டங்களை தோற்றுவித்து அவற்றை பேராயர் போனிஃபேஸின் உயர்மரைமாவட்டம் மற்றும் பெருநகரத்தின் கீழே கொடுத்தார்.
பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணியை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இருந்தனர். அப்போது தமது 73ம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞானஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க “டொக்கு” என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்தவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக் கொண்டிருக்கும்போது, சில கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டார். பேராயரின் உடன் பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் “கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம்” என்று போனிஃபேஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, அன்னாரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், ஃபிரான்சும் ஆழமான விசுவாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர் புனிதர் போனிஃபேஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.

Comments are closed.