தூய ஆவியாரின் வருகைக்காக மன்றாடுவோம் திருத்தந்தை

ஆண்டவரிடம் பல தேவைகளுக்காக மன்றாடும்போது, அவர் நமக்கு வழங்க விரும்பும் தூய ஆவியாரின் வருகைக்காக வேண்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

பெந்தக்கோஸ்து பெருவிழா தயாரிப்புக்கள் இடம்பெற்றுவரும் இந்நாள்களில், நம் வாழ்க்கைக்கு தூய ஆவியார் எவ்வளவு முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 03, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தி வழியாகக் கூறியுள்ளார். ஆண்டவரிடம் நாம் பல காரியங்களுக்காக வேண்டுதல்களை எழுப்புகிறோம், ஆனால், மிகவும் முக்கியமானது எது, மற்றும், அவர் நமக்கு மிக அதிகமாக வழங்க விரும்புவது எது என்பதை அவரிடம் கேட்பதற்கு பல நேரங்களில் மறந்துவிடுகிறோம் என்று அச்செய்தியில் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, ஆண்டவர் நமக்கு தூய ஆவியாரை அளிக்க விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

அன்புகூருவதற்கு சக்தியையும் ஆண்டவர் நமக்கு அருள ஆவல்கொள்கிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, அன்பின்றி, இந்த உலகுக்கு நம்மால் எதை வழங்க முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி

மேலும், ஜூன் 05 இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.