குடும்பம், அன்றாட வாழ்வில் கடவுளை நோக்கிச் செல்வதற்கு ஒரு வழி

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள், நிபந்தனையற்ற அன்பை உள்ளுணர்ந்து அனுபவிக்கவும், தங்கள் அன்றாட வாழ்வில் புனிதத்தில் முன்னேறவும் வேண்டும் என்று இந்த ஜூன் மாதத்தில் மன்றாடுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் தனது செபக்கருத்தை காணொளி வழியாக விளக்கி வருகின்ற  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை மையப்படுத்திய ஜூன் மாதச் செபக்கருத்தை விளக்கியுள்ள காணொளியில், குடும்ப அன்பு, தனிப்பட்ட வாழ்வில் புனிதத்தில் வளர உதவுகின்றது எனவும், நிறைவான குடும்பத்தைப் போன்ற அமைப்பு வேறு எதுவும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

கிறிஸ்தவக் குடும்பங்கள், தங்களின் அன்பை, தெளிவான அடையாளங்களால் வெளிப்படுத்தவும், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு நேரமும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுணரவும் வேண்டும் என்று அக்காணொளியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு மே மாதத்தில் இளையோரை மையப்படுத்தி செபக்கருத்தை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஜூன் மாதத்தில் குடும்பங்களை மையப்படுத்தி தன் செபக்கருத்தை வெளியிட்டு, குடும்பம் பற்றிய தன் சிந்தனைகளையும் காணொளி வழியாக விளக்கியுள்ளார்.

இம்மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை உரோம் நகரில் சிறப்பிக்கப்படும், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டை கருத்தில்கொண்டும், திருத்தந்தை இம்மாதச் செபக்கருத்தை வெளியிட்டுள்ளார். குடும்பம், திருமணம் பற்றிய திருத்தந்தையின் Amoris laetitia அதாவது அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டின் நிறைவாக திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் Amoris laetitia குடும்ப ஆண்டும், இம்மாநாட்டோடு நிறைவடையும்.

பல ஆண்டுகளாக, குடும்பங்கள், நிரந்தரப் பிரச்சனையை எதிர்கொள்ளும் இடங்களாக உள்ளன என்றும், இதனால் நம் குடும்பங்களின் அன்றாட வாழ்வு மீது நாம் அக்கறை காட்டவேண்டும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் மாதச் செபக்கருத்து குறித்த காணொளி, 114 நாடுகளில் 23க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றது. வத்திக்கானின் சமூக வலைத்தள அமைப்பு வழியாக வெளியிடப்படும் இக்காணொளியை, 17 கோடியே 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிடுகின்றனர்.

Comments are closed.