மே 27 : நற்செய்தி வாசகம்

உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23a
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
“கடவுளே அனைத்து உலகின் வேந்தர்”
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
திருப்பாடல் 47: 1-2, 3-4, 5-6 (7a)
“கடவுளே அனைத்து உலகின் வேந்தர்”
வாக்கு மாறாத அரசர்:
பெரிய குற்றம் செய்த குற்றவாளி ஒருவன் அரசர் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். அரசர் அவனுடைய தலையை எடுப்பதற்காக வாளை ஓங்கினார். அப்போது குற்றவாளி அரசரிடம், “எனக்குத் தாகமாக இருக்கின்றது!” என்றான். உடனே அரசர் தன்னுடைய பணியாளரிடம், “ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். பணியாளரும் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து, குற்றவாளியிடம் கொடுத்தார்.
இதையடுத்து, குற்றவாளி தண்ணீரைப் பருகுவதற்காகக் குவளையை வாயருகே கொண்டு சென்றான். அவனால் தண்ணீரைப் பருக முடியவில்லை. ஏனெனில், தண்ணீரைப் பருக முடியாத அளவுக்கு அவனுடைய கை சாவைப் பற்றிய அச்சத்தில் நடுங்கியது. அதைப் பார்த்த அரசர், “இந்தத் தண்ணீரைப் பருகும் வரையில், நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்” என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் குற்றவாளி, தன்னுடைய கையில் இருந்த குவளையைக் கீழே போட்டான். பின்னர் அவன் அரசரிடம், “இந்தத் தண்ணீரைப் பருகும் வரையில், நீங்கள் என்னை எதுவும் செய்யமாட்டேன் என்று சொன்னீர்களே! இப்போது இந்தத் தண்ணீர் முழுவதும் நான் பருக முடியாதவாறு கீழே சிந்திவிட்டது. அப்படியானால், நீங்கள் என்னை எதுவும் செய்யக்கூடாதுதானே!” என்றான். குற்றவாளியின் சாதூர்யத்தைக் கண்டு வியந்த அரசர், தான் கொடுத்த வாக்கிற்கிணங்க அவனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.
ஒரு சாதாரண அரசரே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்போது அனைத்து உலகின் அரசராம் ஆண்டவர் எந்த அளவுக்கு வாக்குப் பிறழாதவராக இருப்பார்! ஆம், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், அனைத்து உலகின் அரசராம் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘அரச மாண்புப் பாடல்’ வகையைச் சார்ந்த திருப்பாடல் 47, கடவுளைப் புகழ்ந்து பாடவேண்டும் என்ற மேலான அழைப்பினைத் தருகின்றது.
கடவுளை நாம் ஏன் புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்கான காரணங்கள் இத்திருப்பாடலில் சொல்லப்படுகின்றது. முதலாவதாக, அவர் பெரிதும் அஞ்சுதற்கு உரியவர். இரண்டாவதாக, அவர் உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர். இத்தகைய காரணங்கள் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடவேண்டும் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். “எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகிறார் ஆண்டவர்” என்கிற வார்த்தைகள் இத்திருப்பாடலில் இடம்பெறுவதால், இது ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவின்போது பாடப்படும் பாடலாகும்.
அனைத்து உலகின் அரசராம் ஆண்டவர் வாக்கு மாறாதவராய், நீதியுடன் நம்மை ஆள்வதால், அவரை நாம் புகழ்ந்து பாடுவோம்.
சிந்தனைக்கு:
 கடவுளைப் போன்று ஓர் அரசர் உலகில் இல்லை என்பதால் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
 நம்மை ஆளும் தலைவர்கள் நம்மை நல்லமுறையில் ஆள வேண்டுவோம்.
 இறையாட்சி இம்மண்ணில் மலர உழைப்போம்.
இறைவாக்கு:
‘அவரது அரசுரிமைக்கு முடிவே இராது’ (தானி 6:26) என்கிறது இறைவார்த்தை. எனவே, என்றும் நம்மை ஆளும் இறைவனின் அரசு இம்மண்ணில் மலர நாம் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.