திருத்தந்தை: உக்ரைனில் அமைதி நிலவ ஒன்றிணைந்து செபிப்போம்

உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ ஒன்றிணைந்து கடவுளை இறைஞ்சுவோம் என்று, மார்ச் 22, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

“மரியாவுக்கு இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட திருநாளாகிய மார்ச் 25, வருகிற வெள்ளிக்கிழமையன்று மனித சமுதாயத்தை, குறிப்பாக, இரஷ்யா மற்றும், உக்ரைனை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளேன், இதன் வழியாக, அமைதியின் அரசியாம் அன்னை மரியா, அமைதியைப் பெறுவதற்கு நமக்கு உதவுவார். இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில், என்னோடு ஒன்றித்திருக்குமாறு அனைத்து குழுமங்கள் மற்றும், நம்பிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்” என்ற சொற்களை திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

இந்த அர்ப்பணிப்பு நிகழ்வின்போது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தான் தங்கியிருக்கும் இல்லத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு ஒன்றிணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.