இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட தானியேல் நூலில், “உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்;” என கூறப்பட்டுள்ளதை வாசிக்கின்றோம்.
ஆண்டவரை முழு உள்ளத்தோடு நம்புவோரை ஆண்டவர் ஒரு போதும் வெட்கத்திற்கு உள்ளாக்குவதில்லை என்பதை நாம் உணர்ந்து விசுவாசத்துடன் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,” என ஆண்டவர் கூறுகிறார்.
பாவம் செய்த நாம் அனைவரும் இந்த தவக்காலத்தில் மனம் வருந்தி அருள் நிறைந்த, இரக்கம் மிகுந்தவரிடம் திரும்பிச் செல்ல வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் நமது குடும்பத்தில், உறவுகளில், பணியிடங்களில் இருப்பவர்களோடு உண்டாகும் பிணக்குகளை மறந்து அவர்களை மன்னிக்காமல் கர்த்தர் கற்பித்த செபத்தை திருப்பலியில் சொல்வதினால் என்ன பயன்? என்ற உண்மையை உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
நேற்று சீனாவில் நடந்த விமான விபத்தில் பலியான 132 விமான பயணிகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அவர்களை இழந்து துக்கத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர் விரைவில் ஆறுதல் பெறவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்கவும், காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.