இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.
நித்திய பேரின்பத்தை சுவைக்க, நித்திய வாழ்வை அடைய இவ்வுலக வாழ்வின் துன்பங்களை எதிர் கொள்ளத் தேவையான மனத் துணிவினை இறைவன் அளித்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி இரண்டாம் வாசகத்தில்,
“தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.” என திருத்தூதர் பவுலடியார் கூறுகிறார்.
தூய ஆவியானவர் நமக்கு அளித்த கொடையை கண்டறிந்து அதை இறைத் திட்டதிட்டத்திற்கு முழுமையாக பயன்படுத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில் கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளம் நம் அன்னை மரியாளின் வேண்டுதலால் நிகழ்ந்தது என்பதைக் கண்டோம்.
நம் அன்னை மரியாளின் பரிந்துரை இவ்வுலகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தது என்பதை அனைவரும் உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக இருந்து இறைத் திட்டத்தை நிறைவேற்றும் இறை கருவிகளாக நாம் வாழ வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.