கிறிஸ்தவத் தனித்தன்மையை பாதுகாக்க உதவவேண்டிய கடமை

ஒவ்வொரு குழந்தையும் தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவத் தனித்தன்மையை பாதுகாக்க உதவவேண்டிய கடமை, அனைவருக்கும் உள்ளது என, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய ஞாயிறு திருப்பலியில் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 9, இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் பணியாளர்களின் 16 குழந்தைகளுக்கு வத்திக்கான் சிஸ்டைன் ஆலயத்தில் திருமுழுக்கு வழங்கி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு வழியாக தங்கள் கிறிஸ்தவ தனித்தன்மையைப் பெறும் குழந்தைகள், அதனை ஆழப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவவேண்டியது பெற்றோர், மற்றும் ஞானப்பெற்றோரின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு குழந்தையும் தன் திருமுழுக்கின்போது பெறும் ஒளி எனும் ஆசிர்வாதத்தில் வளர உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, இது, தினசரி முயற்சிகளையும் அர்ப்பணத்தையும் உள்ளடக்கியது என்பதையும் வலியுறுத்தினார்.

யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப்பெறும் ஆவலுடன் இறங்கிய இஸ்ராயேலர்கள், இறைவனால் தாங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற தேவையை உணர்ந்தவர்களாக, தங்கள் பாதங்களையும் ஆன்மாவையும் முற்றிலும் திறந்தவர்க்காய் முன்னோக்கிச் சென்றதை திருவழிபாட்டுப் பாடல் எடுத்துரைப்பதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.