ஆண்டு முழுவதும் தேவ அன்னை பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டை தொடங்குங்கள் யாழ் ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம்

2022ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள் ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம்.
உலகக் கத்தோலிக்க திருச்சபையானது புதிய ஆண்டின் முதல் தினத்தை தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் ஆண்டு முழுவதிற்குமான அன்னையின் தாய்க்குரிய அன்பையும் பாசமிகு பராமரிப்பையும் இறை பாதுகாப்பையும்; பெற வேண்டும்படி பணித்து நிற்கிறது.
நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனககு நிகழட்டும்; (லூக்கா1:38) என்று தேவ அன்னை இறைசித்தத்தை ஏற்று இறைவனின் தாயாகவும் இறை மக்களின் தாயாகவும் விளங்கி உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்துப் பாரமரித்து வருகிறாள்.
கடந்த ஆண்டு பல இன்பமான அனுபவங்களையும் பல துன்பமான அனுபவங்களையும் தந்து எம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும் இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவே உண்டு.
இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை எம்மைப் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டை தொடங்குங்கள்;;. ஆண்டு முழுவதிலும் தேவ அன்னையின் தாய்க்குரிய அன்பையும் பாசமிகு பராமரிப்பையும் இறை பாதுகாப்பையும்; வேண்டித் தினமும் மன்றாடுங்கள். தேவ தாயை எப்போதும் எங்கிருந்தாலும் என்ன நடந்தாலும் உங்கள் அன்னையாக மனதிலிருத்தி;; என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள். அன்னை வெற்றியையே பெற்றுத் தருவாள்.
இறைவனின் அன்னையும் இறைமக்களின் அன்னையுமான தேவ அன்னை தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் பாதுகாத்து எத்தீங்குமின்றி வழிநடத்தி எம் அனைத்துத் தேவைகளிலும் நிறைவு செய்ய இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தனது புதவருட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.