நவம்பர் 22 : நற்செய்தி வாசகம்

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4.
அக்காலத்தில்
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
முகமலர்ச்சியோடு கொடு
பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் திங்கட்கிழமை
I தானியேல் 1: 1-6, 8-20
II லூக்கா 21: 1-4
முகமலர்ச்சியோடு கொடு
உள்ளதையெல்லாம் காணிக்கையாகக் கொடுத்த சிறுவன்:
நகரில் இருந்த பழமையான பங்கு அது. அந்தப் பங்கில் இருந்த பங்குக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்ததாலும், மழைக் காலங்களில் மேற்கூரை ஒழுகி, மழைத் தண்ணீர் உள்ளே வந்ததாலும், அதைப் புதுபிக்க நினைத்தார் பங்குப் பணியாளர். அதனால் அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், பங்குக் கோயிலின் நிலைமையை எடுத்துச் சொல்லி, “பங்குக் கோயிலைப் புதுப்பிக்க, தற்போது உங்களிடம் உள்ளதைத் தாராளமாகக் காணிக்கையாகச் செலுத்துங்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து வழிபாட்டிற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததைத் தாராளாமாகக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். அவ்வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. வழிபாடு முடிந்தபின் விளையாடுவதற்காக அவனிடம் ஐந்து கூழாங்கற்கள் மட்டுமே இருந்தன. அதனால் அவன் அவற்றைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளர் முன்பாக, பங்குப் பேரவையினரால் காணிக்கை எண்ணப்பட்டது. அப்பொழுது ஐந்து கூழாங்கற்கள் உள்ளே கிடப்பதைக் கண்டு, ‘கூழாங்கற்களை எல்லாமா காணிக்கையாகச் செலுத்துவார்கள், இவற்றைக் கொண்டு என்ன செய்வது?” என்று பங்குப் பேரவையில் இருந்த ஒருவர் கேலி செய்து சிரித்தபோது, மற்றொருவர், “இந்த ஐந்து கூழாங்கற்களையும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் உரூபாய் வீதம் ஐயாயிரம் உரூபாய் கொடுத்து நான் எடுத்துக்கொள்கின்றேன். இவற்றை நான் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் பதிக்கப்போகிறேன். நிச்சயம் எனக்கு இவை கடவுளின் ஆசியைப் பெற்றுத் தரும்” என்று ஐயாயிரம் உரூபாய்க்குக் காசோலையை எழுதி, பங்குப் பணியாளரிடம் கொடுத்தார். இவ்வாறு ஐந்து கூழாங்கற்களைக் காணிக்கையாகச் செலுத்திய சிறுவன், மற்ற எல்லாரையும்விட மிகுதியாகக் காணிக்கை செலுத்தியவன் ஆனான்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கும், அவருடைய திருப்பணிக்கும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். அந்த வகையில், இச்சிறுவன் தன்னிடம் இருந்த ஐந்து கூழாங்கற்களைக் காணிக்கையாகக் கொடுத்தது போற்றுதற்குரியது. இன்றைய இறைவார்த்தை, கடவுளுக்கு மனமுவந்து கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எருசலேம் திருக்கோயிலில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் அங்கே பதின்மூன்று காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் மக்கள் காணிக்கை செலுத்தினார்கள். இதில் செல்வர்கள் தங்களிடமிருந்த மிகுதியானவற்றிலிருந்து காணிக்கைகளைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார்.

Comments are closed.