நவம்பர் 20 : நற்செய்தி வாசகம்

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40
அக்காலத்தில்
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.
மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
லூக்கா 20: 27-30
“போதகரே, நன்றாகச் சொன்னீர்”
நிகழ்வு
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் தலைவராக இருந்தவர் லியோனிட் பிரஸ்னேவ். கிறிஸ்தவராக இருந்தாலும், கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார் இவர். இவர்க்கு முற்றிலும் நேர் எதிராக இருந்தவர் இவருடைய மனைவி. அவர் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
லியோனிட் பிரஸ்னேவ், ஒருநாள் தீடிரென இறந்து போனார். இவர்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் வந்திருந்தார்கள்; அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்சும் (மூத்தவர்) வந்திருந்தார். அந்நாட்டு வழக்கப்படி லியோனிட் பிரஸ்னேவின் உடலுக்குச் செய்யவேண்டிய மரியாதை எல்லாம் செய்யப்பட்டது; கல்லறையில் அவருடைய உடலை அடக்கவேண்டியதுதான் பாக்கி இருந்தது. ஆதலால் படைவீரர்கள், லியோனிட் பிரஸ்னேவின் உடலை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்குக் கொண்டுசென்றார்கள்.
அங்கு சவப்பெட்டியில் இருந்த அவருடைய உடலைக் குழிக்குள் இறக்குவதற்கு முன்னம், படைவீரர் ஒருவர், “தலைவருடைய உடலைக் குழிக்குள் இறக்கப்போகிறோம்… அதனால் கடைசியாக அவருடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். அங்கிருந்தவர்களும் அவருடைய முகத்தை பார்த்துக்கொண்டார்கள். அப்பொழுது யாரும் எதிர்பாராத ஒரு செயல் நடந்தது. அதைக் கண்டு அங்கிருந்த எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். அது என்னவென்றால், அதுவரைக்கும் அமைதியாகவே இருந்த லியோனிட் பிரஸ்னேவின் மனைவி, லியோனிட் பிரஸ்னேவின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, “இயேசுவே! உம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தவர் இவர்; இவருடைய குற்றங்களை நீர் மன்னித்து, இவர்க்கு நிலைவாழ்வை அளித்தருளும்” என்று வேண்டினார். இதைக் கண்டுதான் அங்கிருந்த எல்லாரும் ஜார்ஜ் புஷ் உட்பட, “கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர்க்கு கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கைகொண்டு இப்படியொரு மனைவியாக?’ என்று ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற லியோனிட் பிரஸ்னேவ் எப்படி கடவுள்மீது, அதிலும் குறிப்பாக உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாரோ, அதுபோன்று இன்றைய நற்செய்தியிலும் உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத சதுசேயர்களையும் அவர்கள் இயேசுவிடம் உயிர்ப்பு தொடர்பாக எழுப்புகின்ற சிக்கலான கேள்வியையும் அதற்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதையும் குறித்து வாசிக்கின்றோம். அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் இந்த சதுசேயர்கள்?
நற்செய்தியில் இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று அவரிடம் வருகின்றார்களே சதுசேயர்கள், அவர்கள் யார் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். சதுசேயர்கள், சாதோக்கின் வழிவந்தவர்கள் (எசே 44: 15); பழைய ஏற்பாட்டில் வருகின்ற முதல் ஐநூல்களை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்; வானதூதர்கள்மீதோ, உயிர்ப்பின்மீதோ நம்பிக்கை இல்லாதவர்கள் (திப 23: 6-8) இவர்கள் வானதூதர்கள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்ததற்குக் காரணம், இவர்கள் ஏற்றுக்கொண்ட ஐநூல்களில் அவற்றைப் பற்றிச் சொல்லப்படவில்லையாம் (என்னவோர் அறிவார்ந்த செயல்!). இப்படிப்பட்டவர்கள்தான், ஒருவன் தன்னுடைய மனைவிக்குக் குழந்தை கொடுக்காமல் இறந்துபோனால், கொழுந்தனே மணந்து குழந்தை கொடுக்கலாம் என்ற சட்டத்தோடு வருகின்றார்கள் (இச 25: 5ff; தொநூ 38: 8; ரூத் 3:9; 4:12). இவர்கட்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்
வருங்கால வாழ்வு எப்படி இருக்கும்?
சதுசேயர்கள் தன்னைச் சிக்கலில் மாட்டிவிடத்தான் வந்திருக்கின்றார்கள் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய அறியாமை விளக்கி, அறிவொளி ஊட்டுகின்றார் இயேசு. ‘இவ்வுலகில் இருப்பது போன்று மறுவுலகில் திருமணம் நடைபெறுவதில்லை; இனி அவர்கள் சாகமுடியாது என்பதால் வானதூதர்களைப் போன்றும் கடவுளின் மக்களாகவும் இருப்பார்கள்’ என்று இயேசு சதுசேயர்கட்குச் சொல்கின்ற வார்த்தைகள் இறந்து உயிர்த்தெழும்போது என்ன நடக்கும் என்பதற்கு விடையாக அமைகின்றது.
மேலும் இயேசு, விடுதலைப்பயண நூல் 3:6 ல் வருகின்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, அவர் வாழ்வோரின் கடவுள் என்கின்ற தெளிவை சதுசேயர்க்கும் ஏன், நமக்கும் தருவதாக இருக்கின்றன. சதுசேயர்கள் எந்தப் பகுதியில் உயிர்ப்பைக் குறித்தோ, வானதூதர்களைக் குறித்தோ ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார்களோ, அந்தப் பகுதியிலிருந்தே இயேசு அவர்கட்கு விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து மறைநூல் அறிஞர்களில் ஒருசிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்கிறார்கள்.
இயேசு சதுசேயர்கட்குக் கொடுத்த விளக்கம், கடவுள் இன்றைக்கும் நம் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்கின்ற மிக

அருமையான

உண்மையாய் எடுத்துகூறுவதாக இருக்கின்றது. ஆகையால், இத்தகைய வாழ்வோரின் கடவுட்கு நாம் உகந்தவர்களாக இருக்கவேண்டும் என்றால், அவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடப்பது சாலச் சிறந்தது. நாம் வாழ்வோரின் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை
‘அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே, நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்’ (உரோ 6:5) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் கூறுவதுபோலவே இயேசுவோடு ஒன்றித்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.