குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

இத்தாலிய ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட 200க்கும் அதிகமான பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கினார்.

“ஐரோப்பாவில் இத்தாலியர்கள், மற்றும், கிறிஸ்தவ மறைப்பணி” என்ற மையக்கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கின் தலைப்பை அடிப்படையாகக்கொண்டு, ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

இத்தாலியர்கள், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வேளையில், குடிபெயர்வு என்ற அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்வு, என்ற எதார்த்தம், ‘நாம்’, ‘அவர்கள்’ என்ற எண்ணங்களை விதைக்கின்றது என்றும், இந்த பாகுபாட்டை நீக்குவது, இன்றைய உலகின் மிக முக்கிய தேவை என்றும் எடுத்துரைத்தார்.

தன்னுடைய பெற்றோர் இத்தாலியிலிருந்து ஆர்ஜென்டீனா நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்ற அனுபவத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, நாடுவிட்டு நாடு குடிபெயரும் இத்தாலியர்களுடனும், ஏனைய நாட்டவருடனும் தான் எப்போதும் உள்ளத்தால் நெருங்கியிருப்பதாகக் கூறினார்.

கருத்தரங்கின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘ஐரோப்பா’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பா என்ற பெரிய இல்லத்தில், இத்தாலியர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு நாட்டவரும் நாடுவிட்டு நாடு குடிபெயர்வதால், ஐரோப்பாவின் பன்முகத்தன்மை மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய கண்டத்தின் வெவ்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றுள்ள இத்தாலியர்கள், தாங்கள் செல்லுமிடங்களில் தங்கள் மத நம்பிக்கைக்கு சான்று பகர்ந்துள்ளனர் என்பதை தன் மூன்றாவது எண்ணமாக பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இத்தாலியர்களுக்கே உரிய மகிழ்வையும், ஆர்வத்தையும் பரப்பியது, அவர்கள் ஆற்றிய மறைபரப்புப் பணியாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.

குடிபெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

வேற்று நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்திருக்கும் மக்களை, அந்தந்த நாட்டில் வரவேற்று, அவர்களை சமுதாயத்தின் அங்கங்களாக ஒன்றிணைத்தால், குடிபெயர்ந்தோர், தாங்கள் குடியேறிய நாட்டின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் செறிவு மிக்கதாக மாற்றுவர் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இத்தாலியத் தலத்திருஅவை, இந்த தயாரிப்பு காலத்தில், குடிபெயர்ந்தோர் அறக்கட்டளையையும் தன்னோடு இணைத்து பணியாற்றுவது, நிறைவான உணர்வைத் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுரையின் இறுதியில், தன் மகிழ்வை வெளியிட்டார்.

Comments are closed.