பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு (அக்டோபர் 24)

பரிவுகாட்டும் தலைமைக்குரு இயேசு
நிகழ்வு
ஓரிரு வினாடிகள் கண்களை மூடிக்கொண்டு இருக்கும்போதே எல்லாமும் இருள்மயமாக இருக்கும்போது, ஐம்பத்தோர் ஆண்டுகள் பார்வையின்றிக் கழித்த ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? நினைத்துப் பார்க்கவே திகைப்பாக இருக்கின்றது அல்லவா!
ஆம், அமெரிக்காவைச் சார்ந்த பாப் ஈடன்ஸ் (Bob Edens) என்பவர் பார்வையின்றே பிறந்தார்; பார்வையின்றியே தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். இவருக்கு ஐம்பத்தொரு வயது நடக்கும்போது, இவர்மீது பரிவு கொண்ட ஒரு திறமையான மருத்துவர் இவருக்குச் சிகிச்சை அளித்து, இவர் பார்வை பெறச் செய்தார். இவர் பார்வை பெற்றதும், “பூக்கள், பறவைகள், நிலவு, கதிரவன், வானம், மலைகள் யாவும் இப்படியெல்லாம் இருக்கும் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்போதுதான் அவையெல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்து உணர்கின்றேன்! இந்த அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியவில்லை” என்றார்.
பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுகின்றபோது, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது. பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பரிவுள்ளம் கொண்ட தலைமைக் குருவாம் இயேசு பார்வையளிக்கின்றார் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
பார்வையற்றோர் உட்பட தம் மக்களை மீட்டருளும் ஆண்டவர்
வாழ்க்கையில் எல்லாமும் முடிந்துவிட்டது, இனி வாழ்வதற்கு வழியில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், கடவுள் போன்று ஒருவர் வந்து நாம் மீண்டு எழவும், புதுவாழ்வு பெறவும் நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் எனில், அந்த மகிழ்ச்சியை விவரிப்பதற்கு வார்த்தைகள் போதாது.
பாபிலோயனிர்களால் நாடுகடந்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாக வாழ்ந்தபோது சொல்லொண்ணா வேதனையை அடைந்தார்கள். மேலும் அவர்கள் தாங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டை விட்டு வோறொரு நாட்டில் அடிமைகளாய் வாழ்ந்தபோது கடவுள் தங்களை முற்றிலும் மறந்துவிட்டார் என்று துயரம் அடைந்தார்கள். இதையெல்லாம் கண்கூடக் கண்ட இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருள்வார் என்றும், வடக்கில் இருந்த பாபிலோனிலிருந்து தம் மக்களை அழைத்து வருவார் என்றும் முன்னறிவிக்கின்றார். இவ்வாறு ஆண்டவர் மீட்டருள்வதாகச் சொல்லும் மக்களில், பார்வையோற்றோர், கால் ஊனமுற்றோர், கருவுற்றோர், பேறுகாலப் பெண்டீர் ஆகியோர் அடங்குவர் என்கிறார் இறைவாக்கினர் எரேமியா.
எரேமியா இறைவாக்கினர் முன்னறிவித்த இந்த வார்த்தைகள், யூதா நாட்டினர் எழுபது ஆண்டுகால அடிமை வாழ்விற்குப் பின் தம் சொந்த நாட்டிற்கு வந்தபோது நிறைவேறி இருந்தாலும், ஆண்டவர் இயேசுவில் அவை நிறைவேற்றின என்று சொல்லலாம்.
இயேசுவைத் தலைமைக் குருவாக உயர்த்திய ஆண்டவர்:
யூதர்கள் நடுவில் இருந்த தலைமைக் குருக்களின் பணி மிகவும் முக்கியமானது. மக்கள் சார்பாகக் கடவுளுக்குக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த அவர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் (விப 28; எண் 16: 1-40; 1 சாமு 16: 1-3), மேலும் அவர்கள் வலுவின்மைக்கு உள்ளாகியிருந்ததால், வலுவின்மையோடு இருந்தவர்கள்மீது பரிவுகாட்டக்கூடியவராக இருந்தார்கள்.
இந்தப் பின்னணியில் நாம் இயேசுவைப் வைத்துப் பார்க்கும்போது, இயேசு மனிதர்களால் அல்ல, கடவுளால் தலைமைக்குருவாகப் பணியாற்றத் தேர்ந்துகொள்ளப்பட்டவர். மேலும் அவர் ஆடுகளின் இரத்தத்தை அல்ல, தம் சொந்த இரத்தத்தைப் பாவம் போக்கும் பலியாக ஒரே முறை செலுத்தி மீட்பளித்தவர். இவ்வாறு தம் சொந்த இரத்தைதையே பலியாகச் செலுத்திய இயேசு இரக்கமும் நம்பிக்கையும் கொண்டவர்கூட (எபி 2: 17). இப்படி இரக்கமும் நம்பிக்கையும் கொண்ட, என்றென்றும் குருவான இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் வறியோர் ஒருவர்மீது இரக்கமும் பரிவும் கொண்டு, அவருடைய நம்பிக்கைக்கு தக்க கைம்மாறு அளித்தத்தைதான் இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. .
பார்வையற்றவரிடம் பரிவுகொண்ட இயேசு
யூத இரபிகள் தங்களுடைய பயணங்களின்போது தம் சீடர்களுக்குக் கற்பிப்பது உண்டு. மக்களால் போதகர் என்றும், இரபி என்றும் அழைக்கப்பட்ட இயேசுவும் தனது சீடர்களுக்கு எருசலேம் நோக்கிய பயணத்தில் கற்பித்துக் கொண்டே சென்றிருக்கக்கூடும்.
இந்நிலையில் இயேசு, எருசலேமிலிருந்து வடகிழக்கில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த எரிக்கோவை விட்டு வெளியே வந்தபோது, வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பார்வையற்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதான் போகிறார் என்று கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்துகின்றார். இயேசுவைத் தாவீதின் மகன் என்று கத்திக் கூப்பிடுவதால், சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த இயேசுவுக்கு அது தொந்தரவாக இருக்கும் என்று பர்த்திமேயு நினைக்கவில்லை. தான் இவ்வாறு கத்தியபோது, கத்தவேண்டாம் என்று அதட்டிய மக்களையும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவர் இன்னும் உரக்கக் கத்தி இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார்.
“உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்” (திபா 145: 18) என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுவார். பார்வையற்ற பர்த்திமேயு தன்னை நோக்கிக் கத்தியதும், இயேசு அருகிலிருந்த மக்களிடம், “அவனைக் கூப்பிடுங்கள்” என்று கூறுகின்றபோது, திருப்பாடல் ஆசிரியரின் இவ்வார்த்தைகள்தான் நமது நினைவுக்கு வருகின்றன. முன்னரே பார்த்ததுபோல், இயேசு பரிவும் இரக்கமும் உள்ள தலைமைக் குரு. அதனால் அவர் தன்னை நோக்கிக் கத்திய அல்லது மன்றாடிய பார்வையற்ற பர்த்திமேயுவின் மீது பரிவுகொண்டு அவரைத் தம்மிடம் அழைத்து, “உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்று சொல்லி, அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.
“நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்ற பரத்திமேயுவிடம், “உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்று சொன்னதன் மூலம், இயேசு பர்த்திமேயுவிற்குப் புறப் பார்வை அளித்தது மட்டுமன்றி, அகப்பார்வையும் அளிக்கின்றார். மேலும் பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வையளித்தன் மூலம், இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா கூறிய வார்த்தைகளைத் தன் வழியாகச் நிறைவேறச் செய்தார். நற்செய்தியில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, நலம்பெற்ற பர்த்திமேயு இயேசுவைப் பின்தொடர்ந்து, அவர் வழி நடந்ததுதான்.
ஆகையால், கடவுள் நம்மீது இரக்கமும் பரிவும் காட்டுகின்றார் எனில், அதை நன்கு உணர்ந்தவர்களாய், மற்றவரிடம் அதே பரிவையும் இரக்கத்தையும் காட்டுவது தேவையான ஒன்று. பல நேரங்களில் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை, அவர் காட்டிய இரக்கத்தை மற்றவரிடம் காட்டுவதில்லை. எனவே, நாம் கடவுள் நம்மீது காட்டும் பரிவையும் இரக்கத்தையும் மற்றவர்களுக்கும் காட்டி, அவரது உண்மையான சீடர்கள் ஆவோம்.
சிந்தனை:
“ ‘இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன்’ என்று ஒவ்வொருநாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால், எவ்வளவு அற்புதமாக இருக்கும்” என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் நம்மீது காட்டும் பேரிரக்கத்தையும் பரிவையும் உணர்ந்தவர்களாய், அவற்றை மற்றவர்களுக்குச் செய்யும் சிறுசிறு உதவிகளில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.