வாசக மறையுரை (அக்டோபர் 13)

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் புதன்கிழமை
I உரோமையர் 2: 1-11
II லூக்கா 11: 42-46
அடையாளம் தெரியாத கல்லறைகள்!
சொஸ்த்ராட்டஸ் என்ற கட்டடக் கலைஞர்:
கி.மு மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சொஸ்த்ராட்டஸ் (Sostratos) என்றொரு கட்டடக் கலைஞர் இருந்தார். அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இவரிடம், எகிப்திய மன்னர், அலெக்சாந்திரியாவில் ஒரு கலங்கரை விளக்கத்தைக் கட்டி எழுப்பச் சொன்னார். இதன்மூலம், அவர் கடலில் பயணம் செய்வோர் மிக எளிதாகக் கரை வந்து சேர்வதற்கு உதவ நினைத்தார்.
மன்னர் கொடுத்த வேலை என்பதால், சொஸ்த்ராட்டஸ் மிகக் கவனமாகக் கலங்கரை விளக்கத்தைக் கட்டி எழுப்பினார். கட்டுமானப் பணிகள் முடிந்தபின்பு மன்னருடைய பெயரைத் தங்க நிறத்தில் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பொறித்துவைத்தார். அத்தோடு அவர் தன்னுடைய வேலையை முடித்துக் கொள்ளவில்லை. தன்னுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருந்த அவர் முடிவுசெய்தார். அதனால் அவர் கலங்கரை விளக்கத்திற்குக் கீழ் தன்னுடைய பெயரைப் பொறித்து வைத்துவிட்டு, அதை மண்ணால் மூடி வைத்தார். தன்னுடைய பெயரை மண்ணால் மூடிவைத்ததன் மூலம், கடல் தண்ணீர் அதன்மேல்பட்டு, ஒருசில ஆண்டுகளில் கலங்கரை விளக்கத்தைக் கட்டி எழுப்பியது சொஸ்த்ராட்டஸ்தான் என்பதை எல்லாருக்கும் தெரியும்படி செய்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சொஸ்த்ராட்டஸ் என்ற கட்டடக் கலைஞர், மன்னருடைய பெயரை விளங்கச் செய்யாமல், தன் ‘குறுக்குப் புத்தியால்’ தன்னுடைய பெயரை விளங்கச் செய்தது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிந்த, அடையாளம் தெரியாத கல்லறைகளைப் போன்று இருந்த பரிசேயர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றது. இயேசு ஏன் பரிசேயர்களை ‘அடையாளம் தெரியாத கல்லறைகள்’ என்று சாடுகின்றார் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா விழாவிற்கு உலகமெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள் எருசலேமிற்கு வருவதுண்டு. அவ்வாறு மக்கள் எருசலேமிற்குள் நுழையும்போது, அங்கே இருந்த கல்லறைகளைக் கண்டு யாரும் முகம்சுழிக்கக்கூடாது என்பதற்காக அவற்றைக் கல்லறைகள் என்று தெரியாத வண்ணம் அழகுபடுத்தி வைத்தனர். இயேசு இந்த நடைமுறையை எடுத்துக்கொண்டு, அவற்றைப் பரிசேயர்களோடு ஒப்பிட்டு, அவர்களை அடையாளம் தெரியாத கல்லறைகள் என்று சாடுகின்றார். பரிசேயர்கள் பத்தில் ஒரு பங்கைத் தந்து, தங்களை நல்லவர்கள் போன்று காட்டிக் கொண்டார்கள்; ஆனால், உண்மையில் அவர்கள் தீமையின் மொத்த வடிவாய் இருந்தார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் பிறருக்குத் தீர்ப்பு அளிப்போரைக் கடுமையாகச் சாடுகின்றார். கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் இருக்கும்பொழுது, மனிதர்கள் பிறருக்குத் தீர்ப்பு அழிப்பது கடவுளை இழிவுபடுத்துகின்ற ஒரு செயல் என்று சொல்லும் பவுல், தீர்ப்பிடாமல் வாழச் சொல்கின்றார். ஆகையால், நாம் தீர்ப்பிடுதல் போன்ற வெளிவேடங்களை அகற்றி, நீதியையும் அன்பையும் கடைப்பிடித்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள் (உரோ 12:10)
 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள் (மத் 7:1)
 இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும் (யாக் 2:13)
இறைவாக்கு:
‘நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்’ (எசா 1:17) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் வெளிவேடத்தை அகற்றி, நன்மை செய்யக் கற்றுக்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.