வாசக மறையுரை (ஜூன் 12)

பொதுக்காலம் பத்தாம் வாரம்
சனிக்கிழமை
I 2 கொரிந்தியர் 5: 14-21
II மத்தேயு 5: 37
“வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல்…”
தங்களுக்காக வாழ்வோர் சீடராய் இருக்க முடியாது:
துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் பல இளைஞர்கள் சீடர்களாகத் தங்கிப் பயிற்சி பெற்று வந்தனர். ஒருநாள் ஒரே ஊரைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள், “நாம் இருவரும் இங்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன! பயிற்சிகள் எல்லாம் முடிந்துவிட்டனவா…! இது குறித்துக் குரு எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாரே!” என்று பேசிக்கொண்டனர். இது எப்படியுயோ துறவியின் காதில் விழ, அவர் இவர்கள் இருவரிடம், “உங்களுடைய பயிற்சிக் காலம் முடிந்துவிட்டது. நீங்கள் இங்கிருந்து போகலாம்” என்றார். உடனே இருவரும் தங்களுடைய ஊருக்குப் புறப்பட்டனர்.
இவர்களுடைய ஊருக்குச் சொல்லும் பாதையோ ஒற்றையடிப் பாதை. அதனால் இருவரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். துறவி இருவரையும், இவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றார். போகும் வழியில், பாதையில் கருவேல முற்செடிகள் கிடந்தன. இதைப் பார்த்ததும், முதலாவது சென்றவன், பின்னோக்கி வந்து, ஒரு தாவு தாவி அந்தப் பக்கம் சென்றான். இரண்டாவது சென்றவனோ, பாதையில் கிடந்த முற்செடிகளை அகற்றிவிட்டு, அதன்பின் நடந்து சென்றான். அவன் இவ்வாறு செய்யும்பொழுது, அவனுடைய உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையெல்லாம் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த துறவி, இரண்டாவது இளைஞனைப் பார்த்து, “உன்னுடைய பயிற்சிக் காலம் முடிந்துவிட்டது; நீ வீட்டிற்குப் போகலாம்” என்றார். பின்னர் முதலாவது இளைஞனைப் பார்த்து, “உனக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகின்றது. அதனால் நீ என் பின்னால் வா!” என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போன முதலாவது இளைஞன், “எனக்கு ஏன் பயிற்சி தேவைப்படுகின்றது. நான் பாதையில் கிடந்த முட்செடிகளின்மீது விழுந்து விடாமல், நன்றாகத்தானே தாவினேன்” என்றதற்குத் துறவி அவனிடம், “நீ உன்னைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டாய்; ஆனால், அவன் தனக்குப் பின்னால் வருபவரைப் பற்றியும் கவலைப்பட்டான். பிறரைப் பற்றிக் கவலைப்பட்ட அவனுக்குப் பயிற்சி தேவையில்லை. உன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்ட உனக்குப் பயிற்சி தேவைப்படுகின்றது”என்றார்.
ஆம், இவ்வுலகில் வாழும் யாவரும் தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் வாழவேண்டும். அதையே இந்த நிகழ்வும் இன்றைய முதல்வாசகமும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், “கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது” என்ற வரிகளோடு தொடங்குகின்றது. கிறிஸ்துவின் பேரன்பு என்பதைக் கல்வாரி மலையில் அவர் நமக்காக இறந்ததைக் கொண்டு அறிந்துகொள்ளலாம் (உரோ 5: 6-8; எபே 3: 19). கிறிஸ்து நம்மீது பேரன்பு கொண்டு நமக்காக வாழ்ந்து இறந்தார் எனில், வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழவேண்டும் என்கிறார் பவுல். இன்றைக்குப் பலர் தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவுகள் என்று வாழ்வதைக் காண முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் நமக்காக மட்டுமல்லாமல், கிறிஸ்துவுக்காகவும், அவரது மக்கள் அனைவருக்காகவும் வாழ்வது இன்றியமையாதது. இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளவேண்டும் (பிலி 2: 4).
 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வோர் இழந்துவிடுவர் (யோவா 12: 25).
 நாம் யாருக்காக வாழ்கின்றோம், கிறிஸ்துவுக்காகவா, நமக்காகவா?
ஆன்றோர் வாக்கு:
‘நீங்கள் உயர நினைத்தால் மற்றவர்களை உயர்த்திடவும் தயாராக இருங்கள்’ என்பார் புக்கர் வாஷிங்டன். ஆகவே, தன்னலத்தோடு அல்லாமல், பிறர் நலத்தோடு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.