இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 31.05.2021 இறுதி நாளான இன்று, தொற்று நோயின் முடிவிற்கும், நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கை மீள்வதற்கும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்று தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழாவை நாம் கொண்டாடுகிறோம்.
“பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன்.” என்ற இயேசுவின் வார்த்தைக்கு மரியாள் உயிர் கொடுக்கிறார். பணிவிடை புரிதலின் முன்னோடியாக மரியாள் தோன்றுகிறார். தாழ்ச்சியிலும், பிறரன்பு சேவையிலும் நாம் மரியாளைப் போல விளங்க இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த மே மாதத்தில் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரை நாம் இழந்திருக்கிறோம். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மைக் காத்து வழிநடத்திய நம் தேவனுக்கு நன்றியாக மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கொரோனா தொற்று பரவுதலின் இரண்டாவது அலை குறைந்து வருவது மனதிற்கு சற்று நிம்மதியை தருகிறது. நமது வேண்டுதல்களை செவிமடுத்த நமது இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.