இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட திருத்தூதர் பணிகள் நூலில், பவுலும், பர்னபாவும்
“அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.” என வாசிக்கின்றோம்.
இவ்வுலக வாழ்வின் துன்பமானது விண்ணக வாழ்விற்கான பாதை என்பதை உணர்ந்து மனம் தளராது விசுவாசத்தில் என்றும் நிலைத்திருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இயேசு தரும் அமைதி நிறைவுள்ளது. இயேசுவின் பாதையில் செல்லும்போது துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் துணிவுடன் நடக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற கொரோனா தொற்று நோயாளர்களை இறைவன் தனது திருக்கரத்தால் தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் மறுபடியும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.