#வாசக_மறையுரை (ஏப்ரல் 09)

பாஸ்கா காலம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 4: 1-12
II யோவான் 21: 1-14
“இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை”
இயேசு தம் விலைமதிக்கப்பெறாத இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார்:
ஒரு பங்கில், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கு வழக்கமாகப் பாடம் எடுக்கவேண்டிய ஆசிரியர் அன்று வராததால், புதியவர் ஒருவர் அந்த வகுப்பிற்குப் பாடம் எடுக்கச்சென்றார். அன்றைய நாளில் இறைவாக்கினர் எசாயா நூல் 55வது அதிகாரம் பாடமாகத் தரப்பட்டிருந்தது. புதியவருக்கு ஓர் ஐயம் வந்தது. ‘கருத்தாழமிக்க இந்த இறைவார்த்தைப் பகுதி, இச்சிறியவர்களுக்குப் புரியுமா?’ என்பதுதான் அந்த ஐயம். உடனே அவர், அந்த அதிகாரத்தில் வருகின்ற, “…காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்” என்ற முதல் இறைவார்த்தையை வாசித்துக் காட்டி, “நம்மால் காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்க முடியுமா?” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.
உடனே ஒரு சிறுமி எழுந்து, “நம்மால் அவற்றை வாங்க முடியும். ஏனெனில், இயேசு அதறகான விலையை ஏற்கெனவே கொடுத்துவிட்டார்” என்றார். இதைக் கேட்டு வியந்துபோன அந்தப் புதிய ஆசிரியர். “நீ சொல்வது மிகச் சரி. இயேசு நம்மை தம் விலைமதிக்கப்பெறாத இரத்தத்தைச் சிந்தி மீட்புக்கொண்டார். ஆகவே, நாம் மீட்பை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
ஆம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் விலை மதிக்கப்பெறாத இரத்தத்தின் மூலம், மீட்பினை நமக்குக் கொடையாகத் தந்துவிட்டார். ஆதலால், நாம் அவரிடம் நம்பிக்கை கொள்வதன்மூலம் அவர் தருகின்ற மீட்பினைப் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய முதல்வாசகம், “இயேசுவால் அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை” என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திபோம்.
திருவிவிலியப் பின்னணி:
பேதுருவும் யோவானும் கால் ஊனமுற்றிருந்த மனிதரை எழுந்து நடக்கச் செய்ததைத் தொடர்ந்து, “நீங்கள் எந்த வல்லமையால் அல்லது எந்தப் பெயரால் இதைச் செய்தீர்கள்? என்று தலைவர்களாலும் மக்களின் மூப்பர்களாலும் மறைநூல் அறிஞர்களாலும் தலைமைக் குருவாலும் அவர்கள் விசாரிக்கப்படுகின்றார்கள். அப்பொழுதுதான் பேதுரு திருப்பாடல் 118: 22 இல் வரும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசிவிட்டு, “இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை” என்கின்றார்.
பேதுரு சொல்லும் இவ்வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இயேசு ஒருவராலேயே நமக்கு மீட்பு அளிக்கமுடியும் என்பதால் (யோவா 14: 6; 1 திமொ 2: 5-6), அவரை நாம் யூதர்களைப்போன்று புறக்கணிக்கக்கூடாது; மாறாக, நாம் அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். நாம் நமக்கு மீட்பினை வழங்கும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 இயேசுவே உலகின் மீட்பர் (யோவா 4: 42)
 ‘இயேசு ஆண்டவர்’ என்ற வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர் (உரோ 10: 10)
 நாம் இயேசுவைப் புறக்கணிக்கின்றவர்களா? அல்லது நம்பி ஏற்றுக்கொள்பவர்களா?
இறைவாக்கு:
‘ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகின்றது’ (திவெ 7: 10) என்கிறது திருவெளிப்பாடு நூல். எனவே, நமக்கு மீட்பினை வழங்கும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.