வாசக மறையுரை (ஏப்ரல் 07)

பாஸ்கா காலம் முதல் வாரம்
புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 3: 1-10
II லூக்கா 24: 13-35
“இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்”
இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் எனச் சொல்லமுடியுமா?
திருஅவையின் தலைவராகத் திருத்தந்தை இரண்டாம் இன்னசென்ட் இருந்த நேரமது. அவரைப் பார்க்க ‘இறையியலார்களின் இளவரசர்’ என அழைக்கப்படும் அக்குயினோ நகர்ப் புனித தாமஸ் சென்றிருந்தார். திருத்தந்தை அவரிடம் பலவற்றைக் குறித்துப் பேசிவிட்டு, அவரைக் கருவூலத்திற்கு (Church Treasury) அழைத்துச் சென்று, அங்கிருந்த பணத்தையும் பொன்னையும் வெள்ளியையும் காட்டிவிட்டு, “இப்பொழுது நம்மால், முன்பு பேதுரு சொன்னது போன்று, ‘வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை’ என்று சொல்ல முடியாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அதற்குத் தாமஸ் அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை என்று மட்டுமல்ல, என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கின்றேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் எனவும் சொல்ல முடியாது. ஏனெனில் இயேசு நம்மிடம் இல்லை” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், திருத்தூதர்களைப் போன்று நம்மால் வல்ல செயல்களைச் செய்ய முடியாததை வைத்துப் பார்க்கும்பொழுது, ஒருவேளை இயேசு கிறிஸ்து நம்மோடு இல்லையோ எனக் கேள்வி கேட்கத் தோன்றுகின்றது. இத்தகைய பின்னணில் இன்றைய முதல்வாசகத்தில், பேதுரு இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கால் ஊனமுற்றரை எழுந்துநடக்கச் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் காலை, நண்பகல், மாலை என ஒருநாளைக்கு மூவேளை இறைவேண்டல் செய்வார்கள் (திபா 55: 17). அதன்படி யோவானும் பேதுருவும் பிற்பகல் மூன்றுமணிக்கு இறைவனிடம் வேண்டுவதற்காக எருசலேம் திருக்கோயிலுக்கு வரும்பொழுது, அழகுவாயிலில் இருந்த பிச்சைக்காரர் அவர்களிடம் பிச்சை கேட்கிறார். அப்பொழுது பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்கிறார். அவர் சொன்னதுபோன்ற கால் ஊனமுற்றவர் எழுந்து நடக்கின்றார்.
பேதுரு இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, கால் ஊனமுற்றவரைப் எழுந்து நடக்கச்செய்தது, அவர் உயிர்த்த ஆண்டவரிடமிருந்தும் தூய ஆவியரிடமிருந்தும் பெற்றுக்கொண்ட வல்லமையால்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில், இன்றைய நற்செய்தியின் இறுதியில், “உயிர்த்த ஆண்டவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்தார்” என்று வாசிக்கின்றோம். இவ்வாறு பேதுரு தான் பெற்றுக்கொண்ட வல்லமையைக்கொண்டு கால் ஊனமுற்றவரை எழுந்து நடக்கச்செய்தார். திருமுழுக்கின் வழியாக நாமும் தூயஆவியாரின் வல்லமையைப் பெற்றிருக்கின்றோம். அந்த வல்லமையைக்கொண்டு நாம் நல்லவற்றைச் செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 இயேசுவின் பெயரால் எதைக்கேட்டாலும் அதைச் செய்வார் (யோவா 14: 14).
 இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2: 10).
 நாம் கடவுளின் மன்றாடும்பொழுது, இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுகின்றோமா?
ஆன்றோர் வாக்கு:
‘இயேசுவின் திருப்பெயருக்கு மிகப்பெரிய வல்லமை உண்டு’ என்பார் கிளாய்டன் டாய்லே என்ற அறிஞர். எனவே, நாம் வல்லமைமிக்க இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.