வாசக மறையுரை (ஏப்ரல் 06)

பாஸ்கா காலம் முதல் வாரம்
செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 2: 36-41
II யோவா 20: 11-18
“நீங்கள் மனம் மாறுங்கள்”
போதைக்கு அடிமையான ஒருவர் மனம்மாறி அருள்பணியாளராதல்:
ஜான் கோரபி (John Corapi) என்றொரு இளைஞர் இருந்தார். இவர் சிறுவயதிலேயே தவறான நண்பர்களோடு சேர்ந்து, போதைப்பொருள்களுக்கு அடியாகி தன் வாழ்க்கையைச் சீரழித்தார். இவரது தாய் இவருக்குப் பலமுறை அறிவுரை சொன்னபோதும், இவர் அதற்குச் செவிமடுக்காமல் தன் மனம்போன போக்கிலேயே வாழ்ந்தார். இதனால் இவர் சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரரைவிட மிகக் கேவலமாகக் கிடக்கவேண்டிய நிலைக்கு ஆளானார்.
இந்நிலையில் ஒருநாள் இவர் தன்னுணர்வு பெற்றவராய், போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற நினைத்தார். இதற்காக இவர் ஒரு வயதான அருள்பணியாளரைச் சந்தித்து, தன்னைப் பற்றி முழுவதும் எடுத்துச்சொல்லி, போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். வயதான அருள்பணியாளரும் இவருக்கு நல்வழி காட்டி, இவர் போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைபெறக் காரணமானார். இதற்குப் பின் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருத்துவப் படிப்பை முடித்து, ஏழாவது ஆண்டில் திருத்தந்தை புனித ஜான்பால் அவர்களால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
ஆம், போதைக்கு அடிமையான ஜான் கோரபி தன் தவற்றை உணர்ந்ததும் முற்றிலும் மனம்மாறி, புது மனிதராக வாழத்தொடங்கினார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், திருத்தூதர் புனித பேதுரு அறிவித்த போதனையைக் கேட்டு, மூவாயிரம் பேர் மனம் மாறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்களுக்கு அஞ்சி தாங்கள் இருந்த இடத்தின் கதவை மூடிவைத்திருந்த இயேசுவின் சீடர்கள் (யோவா 20: 19) தூய ஆவியாரின் வருகைக்குப் பின்னர் திடம் பெறுகின்றார்கள். இதன்பிறகு பேதுரு மூவாயிரம் பேர் இருந்த மக்கள்கூட்டத்திடம், “நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவாவுமாக்கினர்” என்கிறார். இதனால் உள்ளம் குத்துண்ட மக்கள், “என்ன செய்யவேண்டும்? என்று கேட்க, அவர் அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள்…” என்கிறார். அவர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
பேதுரு திரண்டிருந்த மக்களிடம் பேசிய வார்த்தைகள், ஆண்டவர் இயேசு சீடர்களிடம் சொன்ன, “…தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28: 19) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. மேலும் கடவுள் அளிக்கும் பாவ மன்னிப்பைப் பெற, ஒருவர் மனம்மாறுவது இன்றியமையாதது என்ற செய்தியையும் நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.
சிந்தனைக்கு:
 தூயஆவியார் முடங்கிக்கிடந்த சீடர்களுக்கு வலுவூட்டி, நற்செய்திப் பணியைச் செய்யத் தூண்டினார் எனில், நஅவர் நம்மையும் தூண்டி எழுப்புகிறார் என்பதே உண்மை.
 பாவத்தை உணராமல், பாவ மன்னிப்பைப் பெற முடியாது.
 இயேசுவின் உயர்ப்பிற்குச் சாட்சியாக நாம் என்ன செய்கின்றோம்?
இறைவாக்கு:
‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்’ (கொலோ 3: 1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாடி, இயேசுவின் உயிர்ப்புச் சாட்சிகளாகத் திகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.