பெரிய வெள்ளி (ஏப்ரல் 02)

I எசாயா 52: 13-53: 12
II எபிரேயர் 4: 14-16; 5: 7-9
III யோவான் 18: 1-19: 42
“நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த இயேசு”
நிகழ்வு
ஒருநாள் கடவுள் ஓரூரில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு முன்பாகத் தோன்றி, அவர்களிடம் ஒரே அளவிலான இரண்டு சிலுவைகளைக் கொடுத்து, “இதை நான் சொல்கின்ற இடம் வரைக்கும் தூக்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். இருவரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, கடவுள் குறிப்பிட்ட அந்த இடத்தை நோக்கிச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு வரத் தொடங்கினார்கள்.
முதல் இளைஞர் அந்த நாள் மாலைக்குள்ளாகவே சிலுவையைக் கடவுள் சொன்ன இடத்திற்குத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். இரண்டாவது இளைஞரால் மறுநாள் மாலைதான் சிலுவையைக் கடவுள் சொன்ன இடத்திற்குத் தூக்கிக்கொண்டு போக முடிந்தது. இதைப் பார்த்துக் கடவுளிடம் அவரிடம், “நீ ஏன் இவ்வளவு தாமதமாகச் சிலுவைத் தூக்கிக்கொண்டு வருகின்றாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞர், “நீர் அவனுக்கு கொடுத்த சிலுவையை விடவும் எனக்குக் கொடுத்த சிலுவையின் எடை கூடுதலாக உள்ளது. அதனால்தான் என்னால் இந்தச் சிலுவையை இவ்வளவு தாமதாகக் கொண்டுவர முடிந்தது” என்றார்.
“உண்மையில் நீ சொல்லக்கூடிய காரணம் சரியானதில்லை” என்று அந்த இளைஞரிடம் பேசத் தொடங்கிய கடவுள், “அந்த இளைஞரால் நேற்று மாலையே தன்னிடம் கொடுக்கப்பட்ட சிலுவையை இங்குக் கொடுவர முடிந்ததென்றால், அதற்கு முக்கியக் காரணம், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை மனமுவந்து சுமந்தார் என்பதுதான். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை மனமுவந்து சுமந்ததால் சுமை எளிதானது; ஆனால், நீ ‘எனக்கு இவ்வளவு பெரிய சிலுவை கொடுக்கப்பட்டுவிட்டதே!’ என்று உனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை விருப்பமின்றியும் வேண்ட வெறுப்பாகவும் சுமந்தாய். அதனாலேயே நீ சுமந்து வந்த சிலுவையின் எடை கூடுதலாக இருந்தது போன்று உனக்குத் தெரிந்திருக்கின்றது” என்றார்.
ஆம், வாழ்க்கையில் வரும் எந்தவொரு சிலுவையையும் அல்லது சுமையையும் மனவிருப்பத்தோடு சுமந்தால், அது சுகமான சுமைதானே! இன்று நாம், நம் ஆண்டவர் இயேசு நமக்காகச் சிலுவை சுமந்து சென்றதையும், அதில் இறந்ததையும் நினைத்துப் பார்க்கின்றோம். இயேசுவின் பாடுகள், அவர் அடைந்த துன்பங்கள் நமக்குக் என்ன செய்தியை உணர்த்துகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பாவம் செய்யாதிருந்தும் பாவிகளுக்குரிய தண்டனையைப் பெற்ற இயேசு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நம் தலைமைக் குரு பாவம் செய்யாதவர்” என்று வாசிக்கின்றோம். பிலாத்துகூட இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கூறும்பொழுது, “மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை” (லூக் 23: 22) என்றே கூறுகின்றார். இப்படிப் பாவம் செய்யாத, மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் காணவியலாத இயேசு எதற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவுக்கு உள்ளாக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தோமெனில், அதற்கு இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும், அவர் நம் குற்றங்களுக்காகச் சிலுவைச் சாவுக்கு உள்ளானார் என்பதுதான் பதிலாக வரும்.
ஆம், இயேசு உலகில் பாவங்களைப் போக்க வந்த கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29); அவர் சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களைச் சுமந்தவர். ஆதலால், பாவம் செய்யாத இயேசு, பாவிகளுக்குரிய தண்டனையைப் பெற்றது நம்மீது கொண்ட அன்பினால்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
கத்தாத செம்மறியான இயேசு
பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவு, பாவமே செய்யாத இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவை அல்லது தண்டனையை வேண்டா வெறுப்பாக அல்ல, தந்தையின் திருவுளம் என்று விரும்பி ஏற்றுக்கொள்கின்றார் இயேசு (லூக் 22: 42). இன்னும் சொல்லப்போனால், இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போன்று அவர் வாயைத் திறவாயிருந்தார்.
விசாரணையின்போது இயேசு ஏரோது, தலைமைக் குரு கயபா, பிலாத்து ஆகியோர் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டபொழுது தான் குற்றமற்றவர் என்று நிரூபித்திருக்கலாம் அல்லது அவரே சொல்வது போல், யூதர்களிடம் காட்டிக்கொடுக்கப்படாதவாறு அவரது காவலர்கள் போராடியிருக்காலம்; இயேசு இது எதையுமே செய்யாமல் கத்தாத செம்மறியாவே இருக்கின்றார். இதன்மூலம் அவர் தந்தைக் கடவுளுக்கு உகந்ததையே செய்து (யோவா 8: 29), அவரை மாட்சிப்படுத்துகின்றார் (யோவா 17: 4). இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுள் தன்னிடம் கொடுத்த வேலைகளை செய்து முடித்து, அவரை மாட்சிப் படுத்தியது போல, நாம் ஒவ்வொருவரும் தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிக் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும். இது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமை என்பதை மறந்துவிடக்கூடாது
மாட்சியுறும் இயேசு
ஒரு கத்தாத செம்மறியாய், பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவை பாவமே செய்யாத இயேசு ஏற்றுக்கொண்டு தந்தைக் கடவுளை மாட்சிப்படுத்தினார் என்று பார்த்தோம். அவர் தந்தைக் கடவுளை மாட்சிப்படுத்தியதால், தந்தைக் கடவுளும் அவரை மாட்சிப்படுத்துகின்றார். அவர் எவ்வாறு மாட்சிப்படுத்தப்படுவார் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் வரும் முதல் இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது.
“இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்” என்று துன்புறும் ஊழியராம் இயேசு எவ்வாறு மாட்சியுறுவார் என்கிறார் ஆண்டவர். திருத்தூதர் பவுலும் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (பிலி 2: 9-10) இது தொடர்பாக மிக அழகாகக் கூறுவார். எனவே, இயேசு எப்படி தன்னையே கையளித்துக் கடவுளில் மாட்சிப்படுத்தினாரோ, அப்படி நாமும் இறைவனின் திருவுளம் நிறைவேற நம்மையே கையளித்து தந்தையை மாட்சிப்படுத்துவோம். எதிர்வரும் துன்பங்களையும் சவால்களையும் சிலுவைகளையும் மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்.
சிந்தனை
‘திருஅவையின் உண்மையான பெருமை சிலுவையில் அடங்கியுள்ளது’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் சிலுவையைச் சிறுமையாகப் பார்க்காமல், நமது பெருமையாகப் பார்த்து, அது சுட்டிக்காட்டும் தியாகம், அன்பு, மன்னிப்பு ஆகிய பண்புகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.