பிப்ரவரி 25 : நற்செய்தி வாசகம்

கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
தவக்காலம் முதல் வாரம் வியாழக்கிழமை
I எஸ்தர் (கி) 4: 17
II மத்தேயு 7: 7-12
“கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்”
வேண்டுதலைக் கேட்ட கடவுள்:
சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் இருந்தார். இவர் பெரிய எழுத்தாளரும் கூட; ஆனால், கடவுள் மறுப்பாளர். இவரது மனைவி இவருக்கு முற்றிலும் மாறாகக் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டார். ஒருநாள் இவருடைய வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்குக்கூட கையில் காசில்லாத நிலை. அப்பொழுது இவர் தன் மனைவியிடம், “நீதான் பெரிய கடவுள் நம்பிக்கையாளர் ஆயிற்றே! எங்கே இப்பொழுது நீ நமக்கு உணவுகிடைக்க உன் கடவுளிடம் வேண்டி ஏதாவது பெற்றுத் தா. அப்பொழுது நான் நீ வழிபடுகின்ற கடவுளை நம்புகிறேன்” என்றார். உடனே இவருடைய மனைவி உள்ளறைக்குள் சென்று வேண்டிவிட்டு வெளியே வந்தார்.
அப்பொழுது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுவிட்டு இவர், “நீ வணங்குகின்ற கடவுள்தான் கதவைத் தட்டுகின்றார் என்று நினைக்கின்றேன்; எதற்கும் போய்க் கதவைத் திறந்து பார்” என்று கேலியாகப் பேசினார். இவரது மனைவியும் விரைந்து சென்று, கதவைத் திறந்து பார்த்தார். அங்கு அஞ்சல்காரர் நின்றுகொண்டிருந்தார். அவர் இவரிடம், “அம்மா! உங்கள் கணவர் எழுதிய புத்தகத்திற்கு, அதன் பதிப்பாசியர் ஆயிரம் உரூபாய் சன்மானம் அனுப்பியிருகின்றார். அதனால் நீங்கள் போய் உங்கள் கணவரை வரச் சொல்லி, இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்றார். மனைவி தன் கணவரிடம் இச்செய்தியைச் செய்தியைச் சொன்னபொழுது, அவர் உண்மையாகவே கடவுள்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
கடவுள், தம் மக்கள் தன்னை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதலைப் புறக்கணிப்பதில்லை; அவர் அவற்றிற்குச் செவிசாய்க்கின்றார் என்பதை இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் இயேசு “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்கின்றார். இதற்கு அர்த்தம் தருவதாம் இருக்கின்றது இன்றைய முதல் வாசகம். முதல் வாசத்தில் எஸ்தர் அரசி தன் இனத்தவரை ஆமானிடமிருந்து விடுவிக்குமாறு ஆண்டவரிடம் மன்றாடுகின்றார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டைக் கேட்டு, தாம் தேர்ந்துகொண்ட மக்களாகிய இஸ்ரயேல் மக்களை எதிரியிடமிருந்து விடுவிக்கின்றார். இதன்மூலம் கடவுள் தம் மக்களுடைய வேண்டுதலைப் புறக்கணித்துவிடுவதில்லை; மாறாக அவர் அவர்களுடைய வேண்டுதலைக் கேட்கின்றார் என்பது உறுதியாகின்றது.
சிந்தனைக்கு:
 நன்மைகளையே அளிக்கும் கடவுளிடம் நாம் ஒவ்வொருநாளும் வேண்டுவதுதான் எத்துணைச் சிறப்பானது!
 ஏழைகளாகிய நாம் ஆண்டவரை நோக்கிக் கூவியழைக்கும்பொழுது, ஆண்டவர் நமக்குச் செவி சாய்க்கின்றார் (திபா 34: 6).
 துன்பமே வேண்டாம் என்று மன்றாடவேண்டாம்; துன்பங்களைத் தாங்கிக்கொள்ள ஆற்றலைத் தாரும் என்று கடவுளிடம் மன்றாடுவோம் – புருஸ் லீ
இறைவாக்கு:
‘அவரை நான் மன்றாடிய நாளில் எனக்கு அவர் செவிசாய்த்தார்’ (திபா 116: 2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்குச் செவிசாய்க்கும், நம் குரல் கேட்கும் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.