பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————–
“எனக்கே செய்தீர்கள்”
தெரசாவின் அன்புப் பணி:
கொல்கொத்தா நகரில் இருந்த புனித தெரசாவின் ‘சிசு பவனுக்கு’ வந்த குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் குறைமாதத்தில் பிறந்தவர்களாகவும், கருச்சிதைவுக்கு ஆளானவர்களாகவும், பெற்ற தாயால் குப்பைத் தொட்டியில் தூக்கி விசைப்பட்ட குழந்தைகளாகவும் இருந்தார்கள். அவர்களைப் பராமரித்துக்கொள்வதற்குத் தெரசாவிற்கு மிகுதியாகச் செலவானது. அப்படி மிகுதியாகச் செலவழித்து அவர் அவர்களைப் பராமரித்துக் கொண்டாலும், அவர்கள் விரைவிலியே இறந்துபோனார்கள்.
இதையறிந்த திரு. நவீன்செளலா என்பவர் தெரசாவிடம், “அன்னையே! உங்கள் சிசு பவனுக்கு வருகின்ற குழந்தைகளை நீங்கள் மிகுதியாகச் செலவழித்துப் பராமரித்துக் கொண்டாலும், அவர்கள் விரைவிலேயே இறந்துபோய்விடுகின்றார்களே! பிறகு எதற்கு நீங்கள் அவர்களை மிகுதியாகச் செலவு செய்து பராமரிக்க வேண்டும்?” என்றார். அதற்குத் தெரசா அவரிடம், “எந்தக் குழந்தையும் கவனிக்கப்படாமலும், அன்பு காட்டப்படாமலும் சாகக்கூடாது. அதற்காகவே நாங்கள் மிகுதியாகச் செலவழித்துப் பாராமரிக்கின்றோம்” என்றார்..
ஆம், கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா குழந்தைகள், ஏழைகள், அனாதைகள், நோயாளர்கள் யாவரையும் மிகுந்த அன்போடு பராமரித்தார். இவ்வாறு அவர் எல்லாரையும் மிகுந்த அன்போடு பராமரிக்கக் காரணம் இன்றைய நற்செய்தியில் இடம்பெறும், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்ற இறைவார்த்தையால் தொடப்பட்டதாலேயே ஆகும். இவ்வார்த்தைகளின் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறுதித் தீர்ப்பு பற்றி இயேசு சொல்லும் உவமைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. இந்த உவமையில் இடம்பெறும் நேர்மையாளர்களும் நேர்மையற்றவர்களும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு பெறுகின்றார்கள். இதை வேறு விதமாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!” என்ற இறைவார்த்தைக்கேற்ப நேர்மையாளர்கள் பசித்த்திருந்தோர், தாகத்தோடு இருந்தோர், ஆடையின்றி இருந்தோர், அன்னியர், நோயாளர், சிறையில் இருந்தோர் ஆகியோர்மீது தங்கள்மீது அன்புகூர்ந்தது போல், அவர்மீதும் அன்புகூர்ந்தார்கள்; அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தார்கள். இவ்வாறு நேர்மையாளர்கள் தேவையில் இருந்தவர்களுக்குச் செய்த உதவியின் மூலமாக இயேசுவுக்கு உதவி செய்ததால், அவர்கள் விண்ணகத்தை உரிமைப்பேறாகப் பெற்றார்கள். நாமும் எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், விண்ணகத்தை உரிமைப் பேறாகப் பெற முடியும்.
சிந்தனைக்கு:
 ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார் (நீமொ 19: 17)
 வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்வதே உண்மையான நோன்பு – வழிபாடு (எசா 58: 7)
 பசியோடு இருப்பவரைக் கண்டுகொள்ளாது பெருந்தீவனம் தின்பது ஏழு தலையாய பாவங்களில் ஒன்று.

Comments are closed.