பிப்ரவரி 21 : நற்செய்தி வாசகம்

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15
அக்காலத்தில்
தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————-
I தொடக்க நூல் 9: 8-15
II 1 பேதுரு 3: 18-22
III மாற்கு 1: 12-15
ஆண்டவரின் துணையால் சோதனைகளை வெல்வோம்
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ளாட்டுப் போர் ஏற்பட்டபோது, பருத்தியை (Cotton) ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி ஒருசிலர் தென் அமெரிக்காவிலிருந்து வடஅமெரிக்காவிற்குக் கப்பல்கள் வழியாகப் பருத்தியைக் கொண்டு சென்று, மிகுதியான இலாபம் அடைந்து வந்தனர்.
ஒருமுறை ஒருவர் ஒரு கப்பல் தளபதியிடம், “என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் நீங்கள் கொண்டுபோய் இறக்கி விடுங்கள், நான் உங்களுக்கு நூறு டாலர் தருகின்றேன்” என்றார். (அன்றைய காலத்திற்கு நூறு டாலர் என்றால் மிகப்பெரிய தொகை) அதற்குக் கப்பல் தளபதி, “முடியாது” என்றார். மீண்டுமாக அந்த மனிதர், “நான் உங்களுக்கு ஐநூறு டாலர் தருகிறேன். நீங்கள் என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடுங்கள்” என்றார். அப்பொழுதும் கப்பல் தளபதி முடியாது என்றே பதில் சொன்னார்.
வந்தவர் விடவில்லை. அவர் கப்பல் தளபதியிடம், “நான் உங்களுக்கு ஐயாயிரம் டாலர் தருகின்றேன். நீங்கள் என்னிடமுள்ள பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் கொண்டு போய் இறங்கி விடுங்கள்” என்றார். இதைக் கேட்டதுதான் தாமதம் கப்பல் தளபதி தன்னிடமிருந்த துப்பாக்கி எடுத்து, வந்தவரின் நெற்றிப்பொட்டில் வைத்து, “நீ என்னை மிகவும் சோதிக்கின்றாய். ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. இல்லையென்றால், நீ என்னுடைய துப்பாக்கிக்கு இரையாகிவிடுவாய்” என்றார். உடனே வந்தவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார்.
இயேசு பேதுருவைப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்’ (மத் 16: 230. என்று சொன்னது போன்று, இந்த நிகழ்வில் வருகின்ற கப்பல் தளபதி தன்னிடம் வந்த மனிதரிடம், “நீ என்னை மிகவும் சோதிக்கின்றாய். ஒழுங்கு மாதிரியாக இங்கிருந்து ஓடிவிடு” என்று சொன்னது மிகவும் பாராட்டிற்குரியதாக இருக்கின்றது. தவக்காலத்தின் முதல்ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நம்முடைய வாழ்வில் வருகின்ற சோதனைகளை ஆண்டவரின் துணையால் வெற்றி கொள்வோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சோதிக்கப்பட்ட இயேசு
மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் இடம்பெறுவது போன்று மாற்கு நற்செய்தியில் இயேசு சோதிக்கப்படுவது பற்றி விரிவாக இல்லையென்றாலும் அங்கு ஒருசில குறிப்புகள் காணக்கிடக்கின்றன.
‘இயேசுவும் சோதனைக்கு உட்பட்டாரா?’ என்று ஒருசிலர் தங்கள் புருவத்தை உயர்த்தலாம். இது குறித்து அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல். மூடி (1837-1899) என்பவர், “சோதிக்கப்படுவது ஒன்றும் பாவமில்லை; சோதனையில் விழுவதுதான் பாவம்” என்பார். ஆம், இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; ஆனால், அவர் சோதனையில் விழுந்துவிடவிலை. மாறாக அவர் இறைவார்த்தையின் துணையால் சோதனையை வெற்றிகொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது, புனித பேதுரு கூறுவது போல், “எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காமல் கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கின்றோம் என்று மகிழ்வோம் (1 பேது 4: 12).
சோதனையை வெற்றிகொண்ட இயேசு
இயேசு எல்லாரையும் போன்று சோதிக்கப்பட்டாலும், அவர் எல்லாரையும் போன்று சோதனையில் விழுந்துவிடவில்லை. மாறாக அவர் தனக்கு வந்த சோதனைகளை இறைவல்லமையால் துணிவோடு வெற்றி கொண்டார். இயேசுவுக்கு பாலைநிலத்தில் அல்லது அவரது பணிவாழ்வின் தொடக்கத்தில் மட்டுமல்ல, அவரது பணி இறுதிவரைக்கும் சோதனைகள் வந்துகொண்டுதான் இருந்தன. கெத்சமனித் தோட்டத்தில் இயேசுவுக்குத் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான சோதனை வந்தபொழுது (லூக் 22: 42), அவர் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தன்னையே கையளித்தார். இவ்வாறு அவர் தனக்கு வந்த சோதனைகளை வெற்றிகொண்டார்.
கிரகாம் ஸ்க்ரோக்கி (Graham Scroggie) என்ற அறிஞர் இது தொடர்பாகக் கூறும்பொழுது, “ஆதாமும் ஏவாளும் ‘ஏதேன் தோட்டத்தில்’ சோதனையில் விழுந்தபொழுது, இயேசு கெத்சமனி தோட்டத்தில் தனக்கு வந்த சோதனையை வெற்றிகொண்டார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் சோதனையில் விழுந்ததற்கும், இயேசுவால் கெத்சமணி தோட்டத்தில் சோதனையை வெல்ல முடிந்ததற்கும் முக்கியக் காரணம், ஆதமும் ஏவாளும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றியதும், இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியதே ஆகும். ஆதாமும் ஏவாளும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றியதால் ஆண்டவர் அவர்களோடு இல்லை, அதனால் அவர்களால் சோதனையை வெல்ல முடியவில்லை. இயேசுவோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். இதனால் ஆண்டவர் அவரோடு இருந்தார். ஆகவே அவரால் சோதனையை மிக எளிதாக வெற்றிகொள்ள முடிந்தது” என்பார்.
ஆம் நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்கின்றபொழுது, ஆண்டவர் நம்மோடு இருப்பார். அப்பொழுது நமக்கு வரும் சோதனைகளை மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும் என்பது உறுதி.
சோதிக்கப்படுவோருக்கு உதவும் ஆண்டவர்
இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் எனில், நாமும் சோதிக்கப்படலாம். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருக்கு உகந்த வழியில் நடக்கும்பொழுது, கடவுளின் துணையால் நமக்கு வரும் சோதனைகளை நாம் மிக எளிதாக வெற்றி கொள்ளலாம் என்பதைக் குறித்து இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் “வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்” என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
வானத்தூதர் இயேசுவின் பிறப்பை ஒட்டியும், அவரது பணிவாழ்விலும் முக்கியப் பங்காற்றியதைப் பற்றித் திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது. இன்றைய நற்செய்தியில் வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள் என்ற வார்த்தைகள், இயேசு சாத்தனை வெல்வதற்கு வானதூதர் அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கக்கூடும் என்ற செய்தியை உணர்த்துவதாய் இருக்கின்றன. இன்றைய இரண்டாம் வாசகம் “இயேசு விண்ணகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்” (1 பேது 3: 22) என்கிறது. இயேசு கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கின்றார் எனில், அவர் சோதிக்கப்படுவர்களுக்கு உதவ வல்லவராகவும் (எபி 2: 18), அவர்களுக்காகப் பரிந்துபேசுபவராவும் இருக்கிறார் (எபி 7: 25) என்பது பொருள்.
ஆகவே, நாம் நமது வாழ்வில் வரும் சோதனைகளை, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது உடனிருப்பின் மூலம் வெற்றிகொள்வோம். அதை விடவும் ஆண்டவர் நாம் சோதிக்கப்படும்பொழுது நமக்கு உதவி செய்ய வல்லவர் என்பதில் நம்பிக்கை வைத்து சோதனைகளை வெற்றி கொள்வோம்.
சிந்தனை:
‘உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்’ (யாக் 1:3) என்பார் புனித யாக்கோபு. எனவே, நாம் சோதிக்கப்படும்பொழுது மனம் தளர்ந்துவிடாமல் அல்லது சோதனையில் விழுந்து விடாமல், இறைவனின் துணையால் மனஉறுதியோடு இருந்து சோதனையை வெற்றி கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.