சனவரி 27 : நற்செய்தி வாசகம்

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20
அக்காலத்தில்
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.
அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார்.
மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
I எபிரேயர் 10: 11-18
II மாற்கு 4: 1-20
வல்லமைமிக்க இறைவார்த்தை
மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்
தன்னிடம் மறைக்கல்வி பயின்ற, ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புவரை உள்ள மாணவர்களிடம் ஆசிரியை திருமதி மிரியம், ‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் (புதையல்)’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதிவரச் சொன்னார்.
மறைக்கல்வி வகுப்பிலிருந்து திரும்பிய சிறுவன் அன்பு, தன் பெற்றோரிடம் ‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம்’ என்ற தலைப்பில் மறைக்கல்வி ஆசிரியர் ஒரு பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார். எதைப் பற்றி எழுதுவது?” என்று கேட்டபொழுது, அவனுடைய பெற்றோர், “எது உனக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகத் தோன்றுகின்றதோ, அதைப் பற்றி எழுது” என்று சொல்லி அனுப்பி வைத்தனர். இதற்குப் பிறகு தன் அறைக்குள் வந்த சிறுவன் அன்பு, தனக்கு எது மிகப்பெரிய பொக்கிஷமாகத் தோன்றியதோ, அதைப்பற்றி எழுதித் தன் பெற்றோரிடம் காட்டினான். அதை அவர்கள் படித்துப் பார்த்தபொழுது, அதன் முதல்வரி, “என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்” என்று தொடங்கியிருந்ததைக் கண்டு வியந்து, அவனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
‘என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் திருவிவிலியம்’ என்று சிறுவன் அன்பு எழுதிய வார்த்தைகள்தான் எவ்வளவு உணர்வுப்பூர்வமானவை. இன்றைய இறைவார்த்தை மிகப்பெரிய பொக்கிஷமான கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடப்பதால், ஒருவர் எத்தகைய ஆசியைப் பெறுகிறார் என்பதையும், இறைவார்த்தையைக் கேளாமலும், கேட்டு அதன்படி நடக்காமலும் போகும்போது அவர் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திக்கின்றார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் இயேசு கிறிஸ்து விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றனர். இந்த உவமையில் இடம்பெறும் நான்கு வகையான நிலங்களை, பலன் தரும் நிலம், பலன் தரா நிலம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த இரண்டு வகையான நிலங்களையும் இரண்டு வகையான மனிதர்களாகப் பிரிக்கலாம். இறைவார்த்தையைக் கேளாமலும், ஒருவேளை கேட்டாலும் அதன்படி நடவாமலும் இருப்பவர் ஒரு வகையினர். இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர் இரண்டாவது வகையினர். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரோ மிகுந்த பலன் தருபவர்களாக இருக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்” என்று தூய ஆவியார் சான்று பகர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒருவருடைய உள்ளத்தில் பதிக்கப்பட்ட ஆண்டவரின் சட்டத்தின்படி, அவருடைய வார்த்தையின்படி அவர் நடவாமல் இருக்கும்பொழுது, அது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பு? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 மனிதர்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் திருவிவிலியத்தில் தீர்வு இருக்கின்றது – ரொனால்ட் ரீகன்.
 கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்குப் புதிய புதிய வழிகளைக் கண்டு பிடியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்.
 மந்திரக்கோலை அசைப்பதால் இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை வந்துவிடுவதில்லை; இறைவார்த்தையைக் கேட்பதால் மட்டுமே, அவர்மீது நம்பிக்கை வரும் – ஜான் பைபர்.
இறைவாக்கு:
‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன’ (யோவா 6: 68) என்பார் பேதுரு. எனவே, நாம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.