வாசகமறையுரை (ஜனவரி 26)

பொதுக்காலம் மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I எபிரேயர் 10: 1-10
II மாற்கு 3: 31-35
தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவோம்
ஜார்ஜ் முல்லரின் வெற்றிக்குக் காரணம் எது?
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகரான ஜார்ஜ் முல்லரிடம் (1805-1898) ஒருவர், “உங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டபொழுது, ஜார்ஜ் முல்லர் அவரிடம், “நான் எனது எண்ணங்கள், என்னுடைய விருப்பங்கள் யாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்கிறேன். அதுதான் எனது வெற்றிக்குக் காரணம்” என்று உறுதியாய்ச் சொன்னார்.
ஜார்ஜ் முல்லர் வெற்றிக்கு அவர் கடவுளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தது காரணமாக இருந்தது. இன்றைய இறைவார்த்தை, கடவுளின் விருப்பம் அல்லது அவரது திருவுளம் நிறைவேற்றுபவரே உண்மையான உறவினர் என்ற செய்தியைச் எடுத்துச் சொல்கின்றது.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு இறையாட்சிப் பணியை ஓய்வின்றிச் செய்து வந்தார். ஆனால், மக்கள் அவரை ‘மதி மயங்கி இருக்கின்றார்’ என்றும், ‘பெயல்செபூல் பிடித்திருக்கின்றது’ என்றும் விமர்சித்தார்கள். இயேசுவை இவ்வாறு விமர்சித்தவர்கள் பிற இனத்தவர் கிடையாது; அவரது சொந்த இனத்தவர்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசுவைப் பார்க்க அவரது தாயும் சகோதர்களும் வருகின்றார்கள்.
இயேசு தன் தாயும், சகோதர்களும் தன்னைப் பார்க்க வந்ததை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தனது உண்மையான உறவினர் யார் என்பதற்கு விளக்கம் தருகின்றார். அதற்காக அவர் பயன்படுத்தும் அளவுகோல்தான் ‘தந்தையின் திருவுளம் நிறைவேற்றுதல்’. மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் அவருக்குத் தாயானார். அதைவிடவும் அவர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். இவ்வாறு மரியா இயேசுவைப் பெற்றெடுத்தது, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியது ஆகிய இரண்டு விதங்களில் இயேசுவுக்குத் தாயாகிறார். ஆனால், யூதர்களோ இயேசுவை நம்பவும் இல்லை; அவர் மதிமயங்கி இருக்கின்றார்; பெயல்செபூல் பிடித்திருக்கின்றது என்று அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இவ்வாறு அவர்கள் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் யூதர்கள் என்ற அடிப்படையில் இயேசுவுக்கு ஒருவகையில் உறவினர்களாக இருந்தாலும், மேற்சொன்ன காரணங்களால் இயேசுவின் உறவினராகாமல் போய்விடுகின்றார்கள். அப்படியெனில், ஒருவர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதைப் பொறுத்தே அவர் இயேசுவின் உண்மையான உறவினராவதும், ஆகாமல் போவதும் இருக்கின்றது.
இன்றைய முதல் வாசகம், தந்தையின் திருவுளம் நிறைவேற இயேசு தன்னையே கையளித்ததை குறித்துப் பேசுகின்றது. ஆகவே, நாம் இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவோம்.
சிந்தனைக்கு:
 எந்த இனத்தவராக இருந்தாலும் இயேசுவின் சொந்த இனத்தவராக முடியும், தந்தையின் திருவுளத்தின்படி நடக்கின்றபொழுது.
 சொந்த இனத்தவராக இருந்தாலும், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவில்லை எனில், இயேசுவுக்கு நாம் யாரோ ஒருவர்தான்.
 இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று நாம் தந்தையின் திருவுளம் நிறைவேற்றத் தயாரா?
இறைவாக்கு:
‘உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ (திபா 40:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். நாம் கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி கண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.