வாசக_மறையுரை ஜனவரி 21

பொதுக்காலம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை
I எபிரேயர் 7: 25-8:6
II மாற்கு 3: 7-12
ஓய்வின்றி இறைப்பணி
குழந்தைகள் வந்தால் எழுப்பிவிடச் சொன்ன சவேரியார்
ஸ்பெயின் நாட்டில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து, கடவுளுடைய வார்த்தையை அறிவித்து, பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தவர் புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552). இவர் ஓய்வின்றிக் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பதும், மறைக்கல்வியைக் கற்றுக்கொடுப்பதுமாய் இருந்ததால், மிகவும் களைப்படைந்தார். ஒருநாள் இவர் தன் உதவியாளரிடம், “நான் மிகவும் களைப்பாக இருப்பதால், சிறிதுநேரம் ஓய்வெடுத்துக் கொள்கின்றேன். மக்கள் யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதவாறு பார்த்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டுக் குடிசைக்கு உள்ளே சென்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுக் குடிசைக்குள்ளே சென்ற சவேரியார் சிறிதுநேரத்திற்குள் வெளியே வந்து, “மக்கள் என்னைத் தொந்தரவு செய்யாதவாறு பார்த்துக்கொள்ளும் என்று சொன்னனே ஒழிய, குழந்தைகள் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை. குழந்தைகள் யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே என்னைத் தட்டி எழுப்பிவிடும்” என்றார்.
ஓய்வின்றிப் பணிசெய்த புனித சவேரியார், தனக்குக் கிடைத்த சிறிதுநேர ஓய்வுநேரத்திலும், குழந்தைகள் யாராவது தன்னைப் பார்க்க வந்தால், தன்னை எழுப்பிவிடத் தயங்க வேண்டாம் என்று சொன்னது, அவர் சிறுகுழந்தைகள், வறியவர்கள்மீது கொண்டிருந்த அன்பைக் காட்டுகின்றது. நற்செய்தியில் இயேசு, மக்கள்கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு சீடர்களிடம் சொன்னபொழுதும், மக்கள் அவரிடம் வந்தபொழுது, அவர் அவர்கள்மீது பரிவுகொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம்.
திருவிவிலியப் பின்னணி
இயேசு கிறிஸ்து உணவு உண்பதற்குக்கூட போதிய நேரம் இல்லாமல் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் நடுவில் பணிசெய்து வந்தார் (மாற் 3: 20). இதனால் பல இடங்களிலிருந்தும் மக்கள் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில் மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு தம் சீடர்களிடம் சொல்கின்றார். இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு சொன்னாலும், மக்கள் அவரைத் தேடிவந்தபொழுது, அவர்கள்மீது பரிவுகொள்கின்றார்; அவர்களிடமிருந்த நோயாளர்களை நலப்படுத்தி, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். இயேசு இவ்வாறு செய்யக் காரணம் அவர் மக்கள்மீது கொண்டிருந்த பேரன்புதான். இன்றைய முதல் வாசகம், அவர் நமக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கின்றார் என்கின்றது. எனவே, நாம் இயேசுவைப் போன்று பரிவும் அன்பும் கொண்டு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பதை உணர்ந்திருக்கின்றோமா?
 இயேசுவை நம்முடைய தேவைகளுக்காக மட்டும் தேடிச் சொல்கின்றோமா? அல்லது எல்லா வேளையும் தேடிச் செல்கிறோமா?
 ‘அன்பைக் கலக்காமல் தயாரிக்கப்படும் ரொட்டி சுவைக்காது; அது மனிதனின் பாதிப் பசியைத்தான் போக்கும்’ –கலீல் ஜிப்ரான்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்’ (திபா 145:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் நம்மோடு வாழ்பவரோடு இரக்கத்தோடும் கனிவோடும் வாழ்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.