வாசக மறையுரை (ஜனவரி 12)

திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம் செவ்வாய்க்கிழமை

I 1 யோவான் 4: 7-10
II மாற்கு 6: 34-44

கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் இருப்பதைப் பிறரோடு பகிர்வார்கள்

தாராளமாய்க் கொடுத்த மாவீரர் அலெக்ஸாண்டர்

ஒருமுறை மாவீரர் அலெக்சாண்டர் மந்திரியோடு நகர்வலம் சென்றபொழுது, பிச்சைக்காரர் ஒருவர் அவரிடம், “ஏதாவது தர்மம் செய்யுங்கள்” என்று கேட்க, மாவீரர் அலெக்சாண்டர் தன்னுடைய மேலாடையில் இருந்த சில தங்கக்காசுகளை எடுத்து, அவரிடம் கொடுத்து, தொடர்ந்து நடந்தார். இதை வியப்போடு பார்த்த மந்திரி, “மாமன்னா! பிச்சைக்காரருக்கு சாதாரண செப்புக்காசுகளையே போட்டிருக்கலாம், எதற்காக நீங்கள் அவருக்குத் தங்கக் காசுகளைப் போட்டீர்கள்?” என்று கேட்டதற்கு, மாவீரர் அலெக்சாண்டர் அவரிடம், “அவருடைய தகுதிக்கு செப்புக்காசுகளே போதும்தான்; ஆனால் நான் இந்த நாட்டின் மன்னர். என்னுடைய தகுதிக்கு ஏற்றாற்போல் நான் கொடுக்கவேண்டும் அல்லவா! அதனால்தான் நான் அவருக்குத் தங்கக் காசுகளைப் போட்டேன்” என்றார்.

மாவீரர் அலெக்சாண்டர் கிரேக்கநாட்டின் மன்னர் என்பதால் தங்கக் காசுகளைக் கொடுத்தார். நாம் அவரைவிடப் பெரியவரான கடவுளின் மக்கள். ஆதலால், நாம் அவரை விடவும் தேவையில் உள்ளவர்களுக்குத் தாராளமாய்த் தரவேண்டும்

திருவிவிலியப் பின்னணி

திருத்தூதர் புனித யோவான், இன்றைய முதல் வாசகத்தில் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் யார் என்பதற்கான விளக்கத்தைத் தருகின்றார். அவ்வாறு அவர் விளக்கம் தருகின்றபொழுது, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தும் யாவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள், ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கின்றார் என்கின்றார். நாம் மற்றவரிடம் எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் பதிலைத் தருகின்றது. நற்செய்தியில் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இயேசு இந்த வல்ல செயலைச் செய்வதற்குச் சிறுவன் தாராளமாய்க் கொடுத்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீண்டுகளும் முக்கியமான காரணமாக இருக்கின்றன. சிறுவன் தன்னிடமிருந்தைக் தாராமாய்க் கொடுத்து, கடவுளிடமிருந்து பிறந்தவன் ஆனான். நாம் நம்மிடம் இருந்ததைத் தாரளாமாய்க் கொடுக்க முன்வருவோம்.

சிந்தனை

 திருத்தூதர் புனித பவுல் ‘அன்பு நன்மை செய்யும்’ (1 கொரி 13: 4), என்பார். நாம் ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கின்றோம் எனில், அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

 ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று இயேசு கூறுவதால், பசியோடு இருப்பவருக்கு உணவிடுவது நமது கடமை என்பதை மறந்துவிடவேண்டாம்.

 இயேசு/ கடவுள் அன்போடும் பரிவோடும் இருப்பதுபோல் நாம் தேவையில் உள்ளவர்கள்மீது அன்போடும் பரிவோடும் இருக்கவேண்டும்.

இறைவாக்கு

‘நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் திருத்தூதர் புனித யோவான். நாம் செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.