நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 28)

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 21: 34-36
மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
நிகழ்வு
Raoul Follerau என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு நகரில் வடிகட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் இவன் இறந்து, ஆண்டவர் இயேசு அமர்ந்திருந்த அரியணை முன்பாகக் கொண்டு நிறுத்தப்பட்டான்.
இயேசுவைப் பார்த்ததும் இவன், “இயேசுவே! நான் என் வாழ்நாள் முழுவதும் உம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடித்திருக்கின்றேன்; இதுவரைக்கும் நான் எந்தவொரு தீமையோ, அநீதியோ கொலையோ செய்ததில்லை. என்னுடைய கைகளை வேண்டுமானால் பாருங்கள். அவை எவ்வளவு தூய்மையாக இருக்கின்றன!” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய கைகளை இயேசுவிடம் விரித்துக் காட்டினான்.
இவனுடைய கைகளைப் பார்த்த இயேசு, “உன்னுடைய கைகள் நீ சொல்வதுபோல் தூய்மையாகத்தான் இருக்கின்றன; ஆனால், அவை வெறுமையாக இருக்கின்றன. இதுவரைக்கும் நீ இந்தக் கைகளால் யாருக்கும் எந்தவொரு நன்மையையும் செய்ததில்லை. அதனால் அவை வெறுமையாக இருக்கின்றன. கைகளை வெறுமையாக வைத்திருக்கும் யாருக்கும் இங்கு இடமில்லை” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.
இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த கஞ்சன், அதன் பிறகு தன்னுடைய கைகளால் இயன்ற வரை நன்மை செய்தான்.
தன்னுடைய கைகளால் யாருக்கும் எந்தவொரு நன்மையும் செய்யாமல், அவற்றை வெறுமையாக வைத்திருக்கும் ஒருவர் விண்ணகத்திற்குள் நுழையத் தகுதியில்லாதவர் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமக்கு சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு ஒருவர் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்பன பற்றிப் பேசுகின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உள்ளத்தை மந்தமடைய வைக்கக்கூடாது
லூக்கா நற்செய்தி 21 ஆம் அதிகாரம் முழுவதும், இறுதிக்காலத்தைப் பற்றிய இயேசுவின் போதனையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம்கூட, இந்தப் பகுதியிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு கருத்துகளை முன் வைக்கின்றார். ஒன்று, உள்ளத்தை மந்தமடையாமல் பார்த்துக் கொள்வது. இரண்டு, விழிப்பாயிருந்து மன்றாடுவது. இயேசு சொல்லக்கூடிய இந்த இரண்டு கருத்துகளையும் சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
மனித உள்ளம் குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலை போன்ற பல்வேறு காரணங்களால் மந்தமடையலாம். இவற்றில் குடிவெறியை ஆண்டவர் இயேசு ஏன் முதன்மையாகச் சொல்கின்றார் என்பதற்கான பதிலைத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கான புனித பவுலின் கீழ்க்காணும் வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்; “திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும்” (எபே 5: 18). ஆம், திராட்சை மது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும் என்பதால்தான் குடிவெறியை இயேசு முதன்மையாகச் சொல்கின்றார். மேலும் இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உங்கள் உள்ளம் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார் இயேசு. நோவாவின் காலத்தில் இருந்தவர்களும் லோத்துவின் காலத்தில் இருந்தவர்களும் குடிவெறிக்கு ஆளாகில் களியாட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவர்களால் அழிவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஆதலால் நாம் இது போன்ற காரணங்களால் நம்முடைய உள்ளம் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்வோம்.
விழிப்பாயிருந்து மன்றாட வேண்டும்
மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது முக்கியமான செயல், விழிப்பாய் இருந்து மன்றாடுவதாகும். விழிப்பாயிருந்து மன்றாடுவது என்பது எப்பொழுதும் நம்முடைய உள்ளத்தை இறைச் சிந்தனைக்குள் உட்படுத்திக்கொண்டு, இறை விருப்பத்தின்படி நடப்பது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவர் இயேசு பகல் முழுவதும் இறையாட்சிப் பணியைச் செய்தாலும், இரவில், கருக்கலில் இறைவேண்டல் மூலம் அவர் இறைவனோடு ஒன்றித்திருந்தார்.
இப்படி நாம் இறைவேண்டல் மூலம் இறைவனோடு ஒன்றித்திருக்கும்போது நமக்கு இறைவனின் விருப்பம் எதுவென நன்றாகத் தெரியும். அதனால் நாம் இறைவழியில் தொடர்ந்து நடப்போம். மேலும் நம்முடைய உள்ளம் குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலை ஆகியவற்றால் மந்தமடையாது. ஆகவே, நாம் நம்முடைய உள்ளத்தை எப்பொழுதும் இறைச்சிந்தனையால் நிரப்பி, விழித்திருந்து மன்றாடுவோம்; நம்முடைய உள்ளம் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்வோம். அதன்மூலம் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவோம்.
சிந்தனை
‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்’ (கொலோ 3:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இவ்வுலகு சார்ந்தவற்றை அல்ல, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவோம். அதன்மூலம் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.