நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 10)

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 17: 22-27
யாருக்கும் தடையாய் இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் இருந்த இயேசு
நிகழ்வு
உரோமை மன்னனாக கி.பி.161 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆண்டு வரை இருந்தவர் மார்க்ஸ் அரேலியஸ்.
இவர் உரோமையின் மன்னராகப் பதவியேற்றதும், அரண்மனையில் இருந்த தலைமை அதிகாரியிடம் ஒரு வாளைக் கொடுத்து, “இந்த வாளை உன்னிடம் நான் கொடுக்கக் காரணம், உரோமை மன்னனாகிய நான், என்னுடைய கடமையைச் சரியாகச் செய்து, எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதால்தான். எப்பொழுது நான் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக இல்லாமல், தடையாக இருக்கின்றேனோ, அப்பொழுது நீ என்னை இந்த வாளால் வெட்டிவிடலாம்” என்றார்.
இதற்கு அந்த அதிகாரியும் சரியென்று சொல்லிக்கொண்டு, மார்க்ஸ் அரேலியஸ் கொடுத்த வாளினை வாங்கிக் கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், மார்க்ஸ் அரேலியஸ் அந்த அதிகாரியிடம் கொடுத்த வாளினை அவர் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவே இல்லை. அந்தளவுக்கு மார்க்ஸ் உரோமை மன்னனாக இருந்த காலக்கட்டத்தில் யாருக்கும் தடையாக இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தார்.
ஆம். நாம் ஒவ்வொருவரும் யாருக்கும் தடையாக இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக் காட்டான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு கோயில் வரி செலுத்துகின்றார். இறைமகனாகிய அவர் கோயில் வரிசெலுத்தத் தேவையில்லை என்றாலும், அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது; எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கோயில் வரி செலுத்துகின்றார். இயேசு செய்த இந்தச் செயல் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் கோயில் வரி செலுத்தவேண்டும்
இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு கோயில் வரியாக இரண்டு திராக்மா செலுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் இந்த நிகழ்வு, அவர் வரிதண்டுபவர் என்பதால், இயேசுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை தனது நற்செய்தி நூலில் இணைத்திருக்கலாம் என உறுதியாக நம்பலாம்.
ஆண்டவர் இயேசு, தன் சீடர்களோடு கப்பர்நாகுமுக்கு வருகின்றபொழுது, கோயில் வரி தண்டுவோர் பேதுருவிடம் “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி செலுத்துவதில்லையா?” என்று கேட்கின்றபொழுது, பேதுரு அவர்களிடம், “ஆம். செலுத்துகின்றார்” என்கின்றார். இதையடுத்து ஆண்டவர் இயேசு பேதுருவிடம் பேசியதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், கோயில் வரியைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விடுதலைப் பயண நூல், 30ஆம் அதிகாரம், 11 முதல் 16 வரை உள்ள இறைவார்த்தைப் பகுதியில், இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் கோயில் வரி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில், கோயில் வரி வசூலிப்போர், குறிப்பிட்ட வயதை அடைந்தவர்களிடமிருந்து வரிவசூலித்து வந்தார்கள். இவ்வாறு வசூலிக்கப்பட்ட கோயில் வரியானது, மக்கள் சார்பாகச் செலுத்தப்பட்ட பொதுப் பலிக்கும், திருக்கோயிலின் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது. இதற்காகவே கோயில் வரி வசூலிப்போர் திருத்தூதர்களின் தலைவராகிய இருந்த பேதுருவிடம், “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்கின்றார்கள்.
யாருக்கும் தடையாய் இராத இயேசு
இவ்வுலகின் தலைவர்கள் சுங்க வரியையோ அல்லது தலை வரியையோ மற்ற மக்களிடமிருந்துதான் வசூலிப்பார்கள். சொந்த மக்களிடமிருந்து வசூலிக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் கோயில் வரியை வசூலிப்பவர்கள் மற்றவர்களிடமிருந்துதான் வசூலிக்கவேண்டுமே ஒழிய, கோயிலில் உடனுறைந்திருக்கும் ஆண்டவரிடம் அல்ல. அவ்வாறெனில், இயேசு கோயில்வரி செலுத்தவேண்டிய தேவையில்லை. ஆனாலும், அவர் கோயில் வரி செலுத்தினார் எனில், அதற்கு முக்கியமான காரணம், அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தார். அவர் பரிசேயர்களைப் போன்று போதித்தது ஒன்றும், வாழ்ந்தது ஒன்றுமாக இருக்கவில்லை. மாறாக, தன் வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துக்காட்டாக இருந்தார். கோயில் வரி செலுத்துகின்ற இந்த நிகழ்வில்கூட, அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது என்பதற்காக கோயில் வரி செலுத்துகின்றார். ஆகவே, நாம் இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, யாருக்கும் தடையாய் இல்லாமல் வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘இயேசு கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்’ (லூக் 24: 19) என்பார்கள் எம்மாவு நோக்கிப் பயணம் செய்த சீடர்கள். ஆகையால், நாம் இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.