நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 08)

பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் சனிக்கிழமை

மத்தேயு 17: 14-20

“உங்களால் முடியாதது ஒன்றும் இராது”

நிகழ்வு

மாவீரன் நெப்போலியன்! இப்பெயரைக் கேள்விப்படாத யாரும் இருக்க முடியுமா…? (வெகு சொற்பமான பேர் இருக்கலாம்). தான் வகுத்த தெளிவான திட்டங்களாலும், போர்த்திறனாலும் ஐரோப்பாக் கண்டத்திலிருந்த பல நாடுகளைக் கைப்பற்றியவர் இந்த நெப்போலியன்.

1796 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய படைவீரர்களோடு ஆஸ்திரியாவின்மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றினார். முன்னதாக இந்த ஆஸ்திரியா நாடானது இத்தாலியின்மீது போர்த்தொடுத்து, அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தாலியின்மீது நெப்போலியன் படையெடுத்துச் சென்று, அதைக் கைப்பற்ற நினைத்தார். இதற்காக அவர் ஆஸ்திரியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே இருக்கக்கூடிய ஆல்ப்ஸ் மலைவழியாக இத்தாலிக்குச் செல்ல வழி இருக்கின்றதா என்று பார்த்து வரத் தன்னுடைய படையில் இருந்த ஒருசில அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அவ்வாறு நெப்போலியனால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகள் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பி வந்தார்கள். “ஆல்ப்ஸ் மலை வழியாக இத்தாலிக்குச் செல்ல வழி இருக்கின்றதா…? நம்மால் அந்த வழியாகச் செல்ல முடியுமா…?” என்று நெப்போலியன் அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள், ‘இல்லை’, ‘முடியாது’ என்று பதில் சொன்னார்கள். இதைக் கேட்ட நெப்போலியன் அவர்களிடம், “ நெப்போலியனின் படையில் இருந்துகொண்டு ‘இல்லை’, ‘முடியாது’ என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை…! ‘இல்லை’, ‘முடியாது’ போன்ற வார்த்தைகள் நம்முடைய அகராதியிலேயே இருக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்த படைவீரர்களை ஒன்று திரட்டி, இத்தாலியை நோக்கிப் புறப்பட்டார். அவ்வாறு அவர் இத்தாலியை நோக்கிப் புறப்பட்ட ஆண்டு 1800.

வழியில் மிகநீண்ட ஆல்ப்ஸ் மலை வந்தது. அதில் தன்னோடு இருந்த அறுபதாயிரம் படைவீரர்களோடு நெப்போலியன் ஏறினார். இடையில் ஒரு செங்குத்துப் பாறை வந்தது. அவரோடு இருந்த படைவீரர்களெல்லாம் மிரண்டு போய்நிற்க, நெப்போலியன், “வீரர்களே! முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தொடர்ந்து முன்னேறுங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார். நெப்போலியனிடமிருந்து இப்படியொரு கட்டளை வந்ததும், படைவீரர்கள் யாவரும் அந்தச் செங்குத்துப் பாறையில் ஏறினார்கள். நான்கு நாள்கள் கடுமையாக போராட்டிற்குப் பிறகு நெப்போலியனோடு இருந்த படைவீரர்கள் யாவரும் அந்தச் செங்குத்துப் பாறை மீதேறி, ஜூன் ஒன்பதாம் நாள் இத்தாலியை அடைந்தார்கள். அங்கு மொண்டேபெல்லோ (Montebello) என்ற இடத்தில், நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களோடு சேர்ந்து, எதிரிகளோடு போர்தொடுத்து, போரில் வெற்றி பெற்றார். இவ்வாறு மாவீரன் தன்மீதும் தன்னுடைய வீரர்கள்மீதும் கொண்ட அசாதரண நம்பிக்கையால், தன்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்ற வார்த்தையே இல்லாமல் செய்தார்.

ஆம், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வது போல், ‘உங்களால் முடியாதது ஒன்றும் இராது’ என்பதற்கேற்ப, மாவீரன் நெப்போலியன் தன்னுடைய நம்பிக்கையால், முடியாதது எதுவும் கிடையாது என்று சாதித்துக் காட்டினார். “உங்களால் முடியாதது இராது” என்று இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போதல்

நற்செய்தியில், பேயின் கொடுமைக்கு உட்பட்டு வலிப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை நலப்படுத்த வேண்டுமென்று தந்தை ஒருவர் அவனை இயேசுவின் சீடர்களிடம் கூட்டிக்கொண்டு வருகின்றார். இயேசுவின் சீடர்களால் அவனை நலப்படுத்த முடியவில்லை. இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பேயை ஓட்ட அதிகாரம் கொடுத்திருந்தார் (மத் 10: 1). அப்படியிருந்தும் அவர்களால் பேயை ஓட்ட முடியவில்லை. அதற்குக் காரணமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களின் நம்பிக்கையின்மை

இயேசுவின் சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போனதற்குக் காரணம், அவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் போனதாலேயே ஆகும். ஒருவேளை அவர்கள் இயேசு தங்களுக்குக் கொடுத்த ஆற்றலில் நம்பிக்கைகொண்டு, சிறுவனிடமிருந்து பேயை ஓட்டியிருந்தால், அவர்களால் முடிந்திருக்கும். இயேசுவின் சீடர்ககள் தங்களால் ஏன் பேயை ஓட்ட முடியவில்லை என்று இயேசுவிடம் கேட்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை குறைவுதான் காரணம்… உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்… உங்களால் முடியாதது ஒன்றும் இராது” என்கின்றார். ஆம், நமக்கு இறைவன்மீது நம்மீதும் நம்பிக்கை இருந்தால், நம்மால் முடியாதது ஒன்றும் இராது.

ஆகையால், நாம் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்.

சிந்தனை

‘நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கைகள்’ என்பார் டென்னிஸன் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய வாழ்விற்கு அர்த்தம் தரும் நம்பிக்கையை ஆண்டவரிடமும் நம்மிடமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை இறைவாகப் பெறுவோம்.

Comments are closed.