பாங்காக் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
அன்பு சகோதரர், சகோதரிகளே, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” (மத். 12:48). என்ற இக்கேள்வியின் வழியே, இயேசு, தன்னைச் சுற்றியிருந்தோரையும், இன்று, நம்மையும் சிந்திக்க அழைக்கிறார். யார் நமது குடும்பத்தினர், நம் உறவுகள்? இக்கேள்விக்கு, இயேசுவே பதில் அளிக்கிறார்: “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்” (மத். 12:50). இன்றைய நற்செய்தி, பல கேள்விகளை முன்னிறுத்தி, வாழ்வு தரும் உண்மையைத் தேட அழைக்கிறது. இயேசுவின் கேள்விகள், நம் வாழ்வை மறுமலர்ச்சி அடையச் செய்வதெற்கென எழுப்பப்படுகின்றன.
இந்நாட்டில் முதன் முதலாக அடியெடுத்து வைத்த மறைப்பணியாளர்கள், ஆண்டவரின் சொற்களைக் கேட்டு, அவற்றிற்கு பதில் அளித்ததன் வழியே, தாங்கள், பரந்துபட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். இரத்த உறவு, கலாச்சாரம், இனம் என்ற எல்லைகளைக் கடந்த இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு, நற்செய்தியைக் கொணர்ந்தனர். அம்மக்களோடு, தங்கள் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டதோடு நில்லாமல், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முயன்றனர்.
இந்நாட்டில் அறிமுகமான நற்செய்தி, இத்தகையச் சந்திப்பு இல்லாமல், இந்நாட்டிற்குரிய முகத்தைப் பெற்றிருக்காது. தாய்லாந்து நாட்டிற்கே உரிய புன்முறுவல், பாடல்கள், நடனங்கள் ஆகியவற்றை இழந்த நற்செய்தியாக இருந்திருக்கும். தந்தையாம் இறைவனின் அன்புத் திட்டம், ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல, மாறாக, அனைவரையும் உள்ளடக்கியது என்பதை, இந்நாட்டிற்கு வந்த மறைப்பணியாளர்கள் உணர்ந்திருந்தனர். “நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” (மத். 22:4,9) என்று தன் மகிழ்வில் கலந்துகொள்ள இறைவன் விடுக்கும் அழைப்பு, அனைவருக்கும் உரியது என்பதைப் புரிந்துகொண்டனர்.
இந்நாட்டில், சியாம் அப்போஸ்தலிக்க பிரதிநிதித்துவம் உருவானதன் (1669-2019) 350ம் ஆண்டு நிறைவை நாம் சிறப்பிக்கின்றோம். மறைபரப்புப்பணியாளர்களான இருவர் விதைத்த விதை, இன்று, பல திருத்தூது முயற்சிகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாக உருவெடுத்துள்ளது. இது, வரலாற்றை நினைவுகூரும் விழா மட்டுமல்ல, மாறாக, அன்று காணப்பட்ட உறுதியுடன் தொடர்ந்து பணியாற்ற விடுக்கப்படும் ஓர் அழைப்பு.
இறைவனின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக நாம் இணையும்போது, அனைவரும் மறைப்பணியில் ஈடுபடும் சீடர்களாகிறோம். ஆண்டவர் இயேசுவின் வழிகளைப் பின்பற்றும்போது, நாமும் இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகிறோம். பாவிகளைத் தேடிச் சென்று அவர்களோடு உணவருந்துதல், தீட்டு என ஒதுக்கப்பட்டவர்களைத் தொடுதல் போன்ற செயல்களால், இயேசு அவர்களுக்கு, கடவுளின் அருகாமையை உணர்த்தினார்.
இந்நேரத்தில், இந்நாட்டில், மனித வர்த்தகம், பாலியல் தொழில் ஆகியவற்றால் தங்கள் மாண்பை இழந்திருக்கும் குழந்தைகளையும், பெண்களையும் நினைத்துப் பார்க்கிறேன். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமைப்பட்டிருக்கும் இளையோரை எண்ணிப்பார்க்கிறேன். தங்கள் சொந்த நாட்டையும், குடும்பத்தையும் விட்டு, இங்கு வந்திருக்கும் குடிபெயர்ந்தோரை எண்ணிப்பார்க்கிறேன்.
இவர்கள் அனைவருமே, இறைவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே நம் அன்னையர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள். மறைபரப்புப்பணி என்பது, திருஅவையில், அதிகமான எண்ணிக்கையில், மனிதர்களைச் சேர்க்கும் முயற்சி அல்ல. மாறாக, உள்ளம் என்ற கதவைத் திறந்து, அனைவரையும் வரவேற்று, அவர்கள் தந்தையாம் இறைவனின் கருணை மிகுந்த அன்பைக் சுவைப்பதற்கு உதவுவதாகும்.
அன்பு தாய்லாந்து வாழ் குழுமங்களே, நம் முதல் மறைபரப்புப்பணியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, முன்னேறிச் செல்வோம். மற்றவர்களைச் சந்தித்து, அவர்களில் நம் தந்தையை, தாயை, சகோதரரை, சகோதரியை அடையாளம் கண்டுகொள்ளவும், அவர்களை இறைவனின் விருந்துக்கு அழைத்துவரவும் முயல்வோம்.
Comments are closed.