இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர் நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்.” என யோவான் தான் எழுதிய திருவெளிப்பாட்டில் கூறுகிறார்.
வானதூதர் பணித்தது போன்று யோவான் சுருளேட்டை எடுத்து உண்டபொழுது, முதலில் கசந்து, பின்னர் தேன்போல் இனித்தது என்பது இறை வார்த்தையின் படி வாழ்க்கின்றபொழுது முதலில் சிரமமாக இருந்தாலும், பின்னர் அது நம்முடைய வாழ்விற்கு வளமும் அர்த்தத்தையும் சேர்க்கும் என்ற உண்மையை உணர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறை வழிபாட்டு தலங்கள் வணிகத் தலங்களாக மாறும் போது மட்டும் இறைவனின் சினம் வெளிப்படுவதில்லை. அதோடு, இறைவன் வாழ விரும்பும் நமது உடலும், மனதும் புனிதம் கெடும் போதும் இறைவன் சினம் கொள்வார் என்பதை உணர்ந்து அதன்படி வாழ இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உத்தரிய நிலையை அடைந்த அனைத்து ஆன்மாக்களும் நமது செபங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து அவர்களுக்காக நாம் திருப்பலிகளை அடிக்கடி ஒப்புக் கொடுக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.