இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த விழாநாளில் நாமும் மரியாவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற, இறைவனுக்காக நாம் நம்மையே முழுமையாய் அர்ப்பணிக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

“ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள்.” என இயேசு எருசலேம் நகரைப் பார்த்து கூறுகிறார்.

எருசலேமிற்கு நேர்ந்த அழிவு நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கிறது. அது என்னவெனில், கடவுளிடமிருந்து ஆசியையும், அவருடைய வார்த்தையையும் ஒவ்வொரு நாளும் பெறுகின்றோம் எனில், நாம் அதற்கேற்றாற்போல் வாழவேண்டும். இல்லையென்றால் நாம் அதற்குரிய தண்டனையை பெறத்தான் செய்யவேண்டும். ஆதலால், கடவுளிடமிருந்து ஆசியையும் அருளையும் பெறக்கூடிய நாம், அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்ய இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல்,செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை ஆவலுடன் செய்ய இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

திருச்சபையின் சொத்துக்களை நான்கில் ஒரு பங்கை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்த திருத்தந்தையும், இன்றைய புனிதருமான *முதலாம் கெலாசியஸை* திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.