புதுப்பித்தல், ஒன்றிப்பு, பணியார்வம் கொண்டு வாழுங்கள்

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட தெயாத்தினி சபையானது, கிறிஸ்துவின் மணமகளாம் திருஅவை, கடவுளின் மக்கள் மற்றும் இறைவனின் உடல் ஆகியவற்றிற்கு பணியாற்ற அர்ப்பணிக்கப்பட்டது என்றும், சபையின் நிறுவனரான புனித கயத்தானோவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, புதுப்பித்தல், ஒன்றிப்பு, பணியார்வத்தோடு ஒப்படைக்கப்பட்ட பணிக்காக இறுதிவரை தன்னை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 14 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் தெயாத்தினி சபையின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 1500 பேரை சபை உருவானதன் 500 ஆவது ஆண்டினை முன்னிட்டு சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதுப்பித்தல், ஒன்றித்தல், பணியார்வம் எனும் மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

புதுப்பித்தல்

தொடக்கத்தில் தெயாத்தினி சகோதரர்கள்  தற்போது நாம் காண்பது போல முழுமையான வார்த்தைப்பாடுகள் ஏற்று பணியாற்றவில்லை, மாறாக வத்திக்கான் கட்டுமானப் பணிகள் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு தங்களால் ஆன பங்களிப்பை வழங்கி உதவினார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நமது பணிக்கு உண்மையாக இருப்பதற்கும், முன்னேற்றத்தின் பாதையில் துணிந்து செல்வதற்கும் புதுப்பித்தல் நமக்கு மிகவும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

நமது நம்பகத்தன்மை புதுப்பிக்கப்பட வேண்டும், புதுப்பிக்கப்படாத நம்பகத்தன்மை என்று எதுவும் இருக்க முடியாது என்றும், புதியதைக் கட்டியெழுப்புவதற்கும், தூய ஆவியாருக்குக் கீழ்ப்படிய உதவாததை ஒதுக்கித் தள்ளவும், இறைத்திருவுளத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வதே புதுப்பித்தல் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிப்பு

தூய பேதுரு பெருங்கோவிலில் பல புகழ்பெற்ற கலைஞர்களாக கைவினைஞர்களாக, தொழிலாளர்களாக, ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்தனர் என்றும், எளிமையான பணிகளில் ஈடுபட்டு, புதிய கட்டிடத்திற்கு உயிர் கொடுக்க ஒன்றாக உழைத்தனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் வாழ்க்கையை செங்கற்கள் மற்றும் பளிங்குகளால் கட்டப்பட்ட இடத்திற்கு அர்ப்பணிக்கவில்லை மாறாக உயிருள்ள கற்களாக அர்ப்பணித்துள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து ஆற்றும் இப்பணியானது அனைவரின் நன்மைக்கான மிகச்சிறந்த அடையாளமாக விளங்குகின்றது என்றும் கூறினார்.    

Comments are closed.