மார்ச் 29 : நற்செய்தி வாசகம்
மார்ச் 29 : நற்செய்தி வாசகம்
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16.
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.
அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என்னை நலமாக்கியவரே ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார். “ ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
“கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார்”
தவக் காலத்தின் நான்காம் வாரம் புதன்கிழமை
I எசாயா 49: 8-15
II யோவான் 5: 17-30
“கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார்”
கடவுள் பேசுகிறார்; நாம்தான் கேட்பதில்லை:
கவலை தோய்ந்த முகத்துடன் அருள்பணியாளரிடம் சென்ற ஓர் இளைஞன், “சுவாமி! நான் என்னுடைய கவலைகளையெல்லாம் கடவுளிடம் சொல்லி எத்தனையோ முறை மன்றாடி விட்டேன். இருந்தும், அவர் என்னுடைய மன்றாட்டிற்குச் செவிமடுக்க வில்லை” என்றான்.
அப்போது அருள்பணியாளர் ஏதோ முணுமுணுத்தார். “என்ன சொன்னீர்கள்?” என்று சொல்லிக்கொண்டு அவரருகில் வந்தான் அவன். அவர் மீண்டுமாக ஏதோ முணுமுணுத்தார். அதுவும் அவனுக்குச் சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவன் அவரை இன்னும் நெருங்கி வந்தான். இந்த முறை அருள்பணியாளர் சொன்னது அவனுக்குத் தெளிவாய்க் கேட்டது. அருள்பணியாளர் அவனிடம் சொன்னது இதுதான்: “கடவுள் எப்போதும் முழக்கமிடுவதில்லை; சில சமயங்களில் அவர் முணுமுணுக்கவும் செய்கிறார்.”
ஆம், கடவுள் தன் மக்களோடு பேசாமல் இருப்பதில்லை; அவர் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார். நாம்தான் அவரது குரலைக் கேட்பதில்லை! இன்றைய இறைவார்த்தை கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசு முப்பத்து எட்டு ஆண்டுகளாகப் படுக்கையில் கிடைந்த ஒருவரை நலமாக்கியதைக் குறித்து வாசித்தோம். இயேசு அந்த மனிதரை நலமாக்கியது ஓர் ஓய்வுநாள். அதனால் இயேசு நலமாக்கிய அந்த மனிதரைப் பரிசேயர்கள் துன்புறுத்துகிறார்கள். தவிர, ஓய்வுநாளில் ஒருவரை எப்படி நலமாக்கலாம் என்று அவர்கள் இயேசுவோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
அப்போதுதான் இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்.” என்கிறார். இயேசு சொன்ன இவ்வார்த்தைகள் பரிசேயர்களுக்குச் சீற்றத்தை வரவழைக்கின்றன. இது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், “ஆண்டவர் என்றுமுள கடவுள்” (எசா 40:27) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் ஆண்டவரும், ஏன், அவர் மகன் இயேசு கிறிஸ்துவும் இன்றும் என்றும் செயலாற்றுகின்றார் என்பது உண்மையாகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டார் என்று புலம்பியபோது, தாய் மறந்தாலும், நாம் உன்னை மறவேன் என்று சொல்லி, கடவுள் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றார். ஆதலால், கடவுள் நம்மோடு இருக்கின்றார். அவர் இன்றும் நம் நடுவில் செயலாற்றுகின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் நாம் நம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
கடவுள் தம் மக்களின் வழியாக இன்றும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றார்.
கடவுளை நம்பிக்கை வாழ்வோரை அவர் ஒருபோதும் கைவிடுவதே இல்லை.
கடவுள் நம் வழியாகச் செயல்பட நாம் நம்மை அனுமதிப்போம்.
இறைவாக்கு:
‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்’ (மத் 28:20) என்பார் இயேசு. எனவே, நம்மோடு இருக்கின்ற, நம் நடுவில் செயலாற்றுகின்ற ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.