வாசக மறையுரை (மார்ச் 24)

ஆசிரியர் ஒன்பதாம் வாய்ப்பாட்டைக் கரும்பலகையில் எழுதி முடித்தபோது மாணவர்கள் நடுவில் ஒரே சிரிப்பொலி. உடனே ஆசிரியர் மாணவர்கள் பக்கம் திரும்பி, வாயைப் பொத்திச் சிரித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை எழுப்பி, “என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அவன், “10×9=90 தானே வரும். நீங்கள் 10×9=89 என்று எழுதி இருக்கின்றீர்களே! அதனால்தான் சிரித்தேன்” என்றான்.
“10×9=90 என்பது எனக்குத் தெரியாதா? நான் தெரிந்தேதான் 10×9=89 என்று எழுதினேன். இதன்மூலம் நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு ஆசிரியர் தொடர்ந்தார்: “நான் எழுதிய ஒன்பதாம் வாய்ப்பாட்டில் முதல் ஒன்பது வரிசை சரியாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. தவறாக உள்ள கடைசி வரிசைதான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. இதன்மூலம் மனிதர்களின் கண்களுக்கு நிறைகளை விடவும் குறைகள்தான் பெரிதாகத் தெரியும். அதற்காக நாம் நற்செயல்களைச் செய்வதை நிறுத்திக்கொள்ளக் கூடாது.”
ஆசிரியர், வகுப்பு மாணவர்களிடம் கூறிய அறிவுரைதான் எவ்வளவு உண்மையானது. இன்றைக்குப் பலர் குறைகளையே பார்த்துப் பழகிவிட்டதால், அவர்களால் நிறைகளைக் கண்டு பாராட்ட முடியவில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியால் பேயை ஓட்டியபோது, அவர் பெயல்செபூலை கொண்டு பேயை ஓட்டுவதாகப் பரிசேயர் விமர்சிக்கிறார்கள். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று” என்ற வரிகளோடு முடியும். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் பரிசேயர்களோடு ஒப்பிட்டால் அப்படியே பொருந்தும்.
இயேசு தூய ஆவியாரால் பேயை ஓட்டிப் பிணிகளைப் போக்கி வந்தார் (திப 10:38). இது பரிசேயர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமலும் நம்பாமலும் இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுவதாக உண்மையைத் திரித்துக் கூறுகின்றார்கள் அல்லது அவரை விமர்சிக்கின்றார்கள். பரிசேயர்கள் தன்னை இவ்வாறு விமர்சித்ததற்கு இயேசு அவர்களிடம், “பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஒட்டுகிறேன் என்றால், உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?” என்று சரியான பதிலடி தருகின்றார்.
இயேசு இறையாட்சி வந்துவிட்டதன் அடையாளமாகப் பேய்களை ஓட்டினார். அது தெரியாமல் பரிசேயர் அவரை விமர்சித்தது வேடிக்கையாக இருக்கின்றது. சில நேரங்களில் நாம் நல்லது செய்கின்றபோதும் நம்மீது கொண்ட பொறாமையால் ஒருசிலர் நம்மை விமர்சிப்பார்கள். அவற்றையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல், இயேசுவைப் போன்று இலக்கை நோக்கித் துணிந்து நடை போடுவோம்.
சிந்தனைக்கு:
 உலகம் உள்ளவரை விமர்சிப்பதற்கு ஆள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் அதற்காக, நாம் நமது முயற்சியைக் கைவிட வேண்டாம்.
 எல்லா விமர்சங்களையும் புறந்தள்ளிவிட வேண்டிய தேவையில்லை. வளர்ச்சிக்குரிய விமர்சனங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
 நன்மை செய்வதற்கு ஒருபோதும் மனம்தரள வேண்டாம்.
ஆன்றோர் வாக்கு:
‘விமர்சகராக இல்லாமல், பாராட்டுபவராக இருங்கள்; ஏனெனில், இந்த உலகம் பல்லாயிரக்கணக்கான விமர்சகர்களைக் கண்டுவிட்டது’ என்கிறது ஒரு பொன்மொழி. எனவே, நாம் மற்றவர்கள் நல்லது செய்யும்போது பாராட்டுவோம். அவர்களது வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.