தேவமாதாவின் வணக்கமாதம் மே 27
தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!
தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.
தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எழுந்தருளி போனது விசுவாச சத்தியமென்று 1950-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அர்ச். பாப்பானவர் வரையறுத்துக் கூறினார்.
தேவமாதா இவ்வுலகத்தை விட்டு மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகிறபொழுது ஒன்பது நவ விலாச சபைகளின் சம்மனசுகள் எல்லோரும் முத்திப்பேறுப்பெற்ற மோட்சவாசிகள் அனைவரும் தங்கள் இராக்கினிக்கு எதிர்கொண்டு வந்து இன்பமான பாட்டுக்களை பாடி பிரபலமான கொண்டாட்டம் செய்தார்கள். மோட்ச இராச்சியத்தின் எப்பக்கத்திலும் பரமநாயகி ஜெயசீலியாக வருகையில் ஓர் விசேஷ சோதிப் பிரகாசம் துலங்குவது போன்றிருந்தது. திவ்விய சேசுவே தமது திருத்தாயாருக்கு எதிராக வந்து மிகுந்த அன்பு பட்சத்துடன் மோட்ச மகிமையான இராச்சியத்துக்குள் பிரவேசிக்க செய்தார். பிதாவாகிய சர்வேசுரன் அன்னையை தமது பிரிய குமாரத்தியாக ஏற்றுக்கொண்டு தம்முடைய ஏக குமாரரான உலக மீட்பரின் வலதுப் பக்கத்தில் அன்னைக்கு ஸ்தாபித்திருந்த சிம்மாசனத்தில் உட்காரச் செய்து அன்னையுடைய திருச்சிரசில் நித்திய ஆனந்தத்தின் முடியை சூட்டி பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாக ஸ்தாபித்து அன்னையுடைய திருக்கையில் தமது அளவில்லாத பொக்கிஷங்களைக் கொடுத்து தேவமாதாவாகவும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளாகவும், புத்தியுள்ள சகலரும் அன்னையை வணங்கி ஸ்துதித்து கொண்டாட வேண்டுமென கற்பித்தார். நாம் எல்லாரும் மோட்சவாசிகளுக்கு ஆனந்தமான அந்த வேளையில் அவர்கள் தேவமாதாவைக் குறித்து அனுபவித்த அகமகிழ்ச்சியை கொண்டு அந்த பரமநாயகியை அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடக்கடவோம். நமது அன்னையிடத்தில் எப்பொழுது சேருவோமோ என்ற ஆசை மிகுதியால் நம்மை மீட்க வேண்டுமென மன்றாடுவோம்.
தேவமாதா மோட்சத்தில் அடைந்த மகிமை.
தேவமாதா மோட்ச இராட்சியத்தில் அடைந்த உன்னத மகத்துவத்தை சிறிது ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரம் நாயகி உலக மீட்பருடைய மெய்யான தாயுமாய் எல்லா வரப்பிரசாதங்களினாலும் பூரணமாக அலங்கரிக்கப் பட்டவர்களுமாய் வாழ்ந்த 70 வருஷமளவும் உத்தம சுகிர்த புண்ணியங்கள் அனைத்தையும் செய்து தமது திருக்குமாரனுக்கு பக்தியுடன் பணிவிடை புரிந்து, புண்ணியவான்களை எல்லாரையும்விட உன்னத சாங்கோபாங்கத்தை அடைந்திருந்தார்கள். மோட்சத்தில் அடைந்த மகத்துவம் இவைகள் எல்லாவற்றிற்கும் ஏற்றவாறு விளங்குகிறது. அப்படியே எல்லா மோட்சவாசிகளுக்கும் மேலானவர்களும் தூதர் அதிதூதர் முதலிய சம்மனசுகளுக்கும் உயர்ந்தவர்களுமானார்கள். அன்னைக்கு மேல் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் மாத்திரம் மேற்பட்டவராயிருக்கிறார். நாம் அந்தப் பரமநாயகி பாத கமலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நம்மால் முடிந்த அளவு மகத்துவத்துக்கு தகுதியான தோத்திரமும் ஸ்துதியும் வாழ்த்துதலும் செலுத்தக்கடவோம்.
தேவமாதாவுக்கு மோட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லபம்.
தேவமாதா இந்த மேன்மையான உன்னதத்தை பெற்று எல்லா தோத்திரத்துக்கும் ஸ்துதிக்கும் உரிமையுள்ளவர்களாய்க் குறையற்ற ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்தாலும் இவ்வுலகில் துன்பப்பட்டு உழலும் தமது அன்புப் பிள்ளைகளான நம்மை மறக்கிறவர்களல்ல! அவர்கள் திருச்சபைக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாதுகாவலும் தாயாரும் இராக்கினியுமாய் இருக்கிறதுமன்றி புண்ணியவாளர் நன்னெறியில் நடக்குமாறும், பாவிகள் பாவத்தைவிட்டு புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க துணியுமாறும் எல்லாருக்கும் அடைக்கலமும் ஆதரவுமாயிருக்கிறார்கள். இடைவிடாது நமக்காக தமது திருமைந்தனிடத்தில் மனுப்பேசி தம்மை மன்றாடுகிறவர்களுக்கும் விலையேறப் பெற்ற வரங்களையும் விசேஷ உபகாரங்களையும் அளிக்கிறார்கள். நாமும் இந்த அன்புள்ள தாயின்மீது தகுதியான மரியாதையும், உறுதியான நம்பிக்கையும், உண்மையான அன்பும் வைத்து வணங்கவும் நேசிக்கவும் சேவிக்கவும் கடவோம். நமது வாழ்நாளெல்லாம் நம்மைக் காப்பாற்றி நாம் சாகிற வேளையில் நம்மை மோட்ச இராச்சியத்தில் சேர்க்க அன்னையை மன்றாடுவோம்.
செபம்.
சேசுகிறிஸ்துநாதருடைய பரிசுத்த தாயாரே! நீர் இந்தக் கண்ணீர் கணவாயை விடுவதற்கு சமயமாயிற்று. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறதற்கு நாங்கள் பேறுபெற்றவர்களல்ல. அதிக பாக்கியமும் அதிக யோக்கியமும் உள்ள இடமான மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகக்கடவீர். என் அன்புள்ள தாயே! நித்தியத்தின் மகிமையான முடியைத் தரித்துக்கொள்ள எழுந்தருளும். நீர் மகிமை நிறைந்த புண்ணியங்களால் பேறு பெற்ற சம்பாவனையை கைக் கொள்ள எழுந்தருளும். உமக்கு ஸ்தாபிக்கப்பட்ட சிம்மாசனத்தில் இராக்கினியாக உட்கார்ந்தருளும். ஆனால் உம்முடைய நீசப் பிள்ளைகளான எங்களை விடுகிறபோது எங்களுடைய பக்தியுள்ள உணர்ச்சிகளுக்கிரங்கி நீர் எங்களுக்கு எப்பொழுதும் அடைக்கலமும் அன்னையுமாய் இருப்பீராக. எங்களுக்கு ஓர் அடையாளமும் உறுதிப்பாடும் தந்தருள மன்றாடுகிறோம். எங்களைப் பெற்ற தாயைப்பார்க்கிலும் அதிக அன்பான தாயே! இரக்கமுள்ள மரியாயே! உம்முடைய பரிசுத்த திருஇருதயத்தை எங்களுக்கு கொடுத்தருளும். இந்தப் பரிசுத்த இருதயமானது தாய் தந்தையற்ற பிள்ளைகளைப்போல் இந்த நிர்ப்பாக்கிய கணவாயில் துன்புறும் எங்களுக்கு உதவியும் ஆதரவும் தஞ்சமுமாயிருக்கும் நாங்கள் பாவ வெள்ளத்தில் அமிழ்ந்திப் போகாதபடிக்கு தற்காக்கும் பேழையைப்போல் இருக்கிற உமது திரு இருதயத்தின் ஆதரவில் ஒடிவந்து நாங்கள் உமது உதவியை அடைந்து மோட்சத்தில் சேருமளவும் புயல்களுக்கு அஞ்சாத நிலை பெறுவோம்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
பரிசுத்த தாயாரே, எங்களை பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.
இருபத்தி ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:
உங்களுடைய கோவில்களில் ஞான புஸ்தகங்கள் உண்டோ, இல்லையோ என்று பார்க்கிறது. இல்லாதிருந்தால் அவைகளை வாங்கிக் கொடுக்கிறது
Comments are closed.