மறைசாட்சியாக உயிரிழப்பதும், சக்தி வாய்ந்த போதனை

Caleruegaவின் புனித தொமினிக் அவர்கள் இறந்ததன் எட்டாம் நூற்றாண்டு நினைவுகூரப்படும் வேளையில், தொமினிக்கன் துறவுசபைக்குச் சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளின் போதகர் என அறியப்படும் புனித தொமினிக்கால் துவக்கிவைக்கப்பட்ட இந்த துறவு சபை, இன்று பல்வேறு தனிவரங்களுடனும், அருளுடனும் சிறந்த கனிகளைக் கொணர்வதைக் காணமுடிகிறது என தன் செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், சகோதரர்கள் என தொமினிக்கன் குடும்பம் பல்வேறு துறைகளில் மறைப்பணியாற்றிவருவது குறித்து பாராட்டியுள்ளார்.

துவக்க கால கிறிஸ்தவர்களைப்போல், எளிமையையும், ஏழ்மையையும் தனதாக்கிக் கொண்டு, ஒரு குழுவை அமைத்த புனித தொமினிக், இறைவார்த்தையின் வாழ்வு தரும் உண்மைகளின் துணையோடு மனித இதயங்களை கதகதப்பாக்கினார் என்கிறது திருத்தந்தையின் செய்தி.

நற்செய்தியின் ஒளியுடனும், கிறிஸ்துவின் கருணைநிறை அன்புடனும், உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய, நமக்கிருக்கும் தடைகளை வெற்றிகொள்ள, புனித தொமினிக்கின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுவதாக எனவும், திருத்தந்தை, அத்துறவுசபைக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தன் பள்ளிப் பருவத்திலேயே, விசுவாசம், பிறரன்பு, உண்மை, அன்பு, நேர்மை, கருணை ஆகிய அனைத்தும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்ந்திருந்த புனித தொமினிக், தன் விலைமதிப்பற்ற புத்தகங்களை விற்று, பஞ்ச காலத்தில், ஏழை மக்களுக்கு உணவு வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளின்றி ஏழ்மையில் வாடியவர்களுக்கும், ஆன்மீக ஏழ்மையில் வாடியவர்களுக்கும் புனித தொமினிக் ஒரே நேரத்தில் பணியாற்றினார் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

புனிதத்துவம், அமைதி, மற்றும் நீதி நிறைந்த உலகை கட்டியெழுப்ப, அதாவது இறையரசின் வருகைக்கான தாகத்தை மக்களில் உருவாக்க, தொமினிக்கன் துறவுசபையினரின் பணி உதவுவதாக என அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வுடன் தொமினிக்கன் துறவியர், இவ்வுலகின் ஒப்புரவு, மற்றும், ஒன்றிப்பிற்காக உழைத்துவருவது குறித்து, பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

கலைஞர்கள், பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமூகத்தொடர்பாளர்களுக்கு, பல்வேறு வகைகளில், தொமினிக்கன் துறவு குடுமபத்தினர், ஊக்கமூட்டிவருவதையும் பாராட்டிய திருத்தந்தை, தொமினிக்கன் துறவு சபையினருக்கு, மறைசாட்சியாக உயிரிழப்பதும், சக்தி வாய்ந்த போதனையாக இருந்தது என, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.