ஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்

மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8
அக்காலத்தில்
பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
தூய ஆவியாரால் வரும் மறுபிறப்பு
பழைய வயலினுக்கு உயிர்கொடுத்த இசைக் கலைஞர்:
பிரபல வயலின் இசைக்கலைஞரிடம் அழகானதொரு வயலின் இருந்தது. அதை அவர் இசைக்கச்சேரிகளிலும் திருவழிபாட்டிலும் எடுத்து மீட்டியபொழுது அற்புதமான இசை வழிந்தோடியது. அதைப் பார்த்துவிட்டு, மக்களெல்லாம், ‘இவரிடம் இருக்கும் இந்த வயலினாலேயே இவரால் மிக அற்புதமான இசையை மீட்டமுடிகின்றது; சாதாரண வயலினில் இவரால் அற்புதமான இசையை மீட்டமுடியாது’ என்று பேசிக்கொண்டார்கள். இவ்வாறு மக்கள் இவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.
நாள்கள் நகர்ந்தன. ஒருநாள் இவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஓரிடத்தில் ஒரு பழைய வயலின் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும், அதன் விலை எவ்வளவு என்று இவர் கேட்க, விற்பனையாளர் சொற்பமான தொகையை விலையாகச் சொன்னார். உடனே இவர் அதை விலை கொடுத்துவாங்கி, தன் இல்லத்திற்குக் கொண்டுவந்து, பழைய நரம்புக் கம்பிகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய நரம்புப் கம்பிகளைப் பொருத்தி, வயலின் முழுவதும் வர்ணம் பூசினார். இப்பொழுது அது புத்தம் புதிய வயலின் போன்று காட்சியளித்தது. பின்னர் இவர் அதைக்கொண்டு இசைக்கச்சேரிகளிலும், திருவழிபாட்டிலும் மீட்டியபொழுது, மக்கள் யாவரும், ‘இவர் அற்புதமான இசைக்கலைஞர்தான்! இவரால் எந்த வயலினிலிருந்தும் அற்புதமான இசையைக் கொடுக்கமுடியும்!’ என்று இவரைப் பாராட்டினார்கள்.
ஆம், இந்த வயலின் இசைக்கலைஞர் கைபட்டதும் பழைய வயலினிலிருந்தும் அற்புதமான இசை வழிந்தோடியது. இன்றைய இறைவார்த்தை தூய ஆவியாரால் வரும் புதுவாழ்வைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவோடு அடிக்கடி வாக்குவாதம் செய்தவர்கள் பரிசேயர்கள். இவர்கள் எல்லாரும் தீயவர்கள் கிடையாது; இன்றைய நற்செய்தியில் வரும் நிக்கதேம் போன்ற நல்லவர்களும் இருந்தார்கள். இவர் இயேசு செய்த வல்லசெயல்களைப் பார்த்து, இயேசு கடவுளிடமிருந்து வந்த ஒரு போதகரென நினைத்துக்கொண்டு அவரோடு பேச வருகின்றார். அப்பொழுது இயேசு அவரிடம், “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காணமுடியாது” என்கிறார்.
இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு, “வயதான பின் ஒருவர் எப்படிப் பிறக்கமுடியும்?” என்கிறார் நிக்கதேம். மறுபடியும் பிறப்பது அல்லது தூய ஆவியாரால் பிறப்பது பற்றிப் பழைய ஏற்பாடு மிகத்தெளிவாகக் கூறினாலும் (எசே 36: 25-27; எரே 31: 31-34; யோவே 2: 28-32) இவர் அதைப்பற்றி அறியாதவாகவே இருக்கின்றார். எனவே, இயேசு அதைக்குறித்த விளக்கத்தைத் தருகின்றார். இன்றைய முதல்வாசகம் தூய ஆவியால் சீடர்கள் ஆட்கொள்வதைப் பற்றிப் பேசுகின்றது எனவே, நாம் தூய ஆவியரால் பிறந்தவர்களாய் அவர் வழிநடப்போம்.
சிந்தனைக்கு
 தூய ஆவியாரால் அவரது தூண்டுதலுக்கேற்ப வாழ்வார் (கலா 5: 16)
 தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவர் இயேசுவைப் போன்று சநன்மை செய்வார் (திபா 10: 38)
 நாம் தூய ஆவியாரால் பிறந்துவிட்டோமா?
இறைவாக்கு:
‘தூய ஆவியாரே உண்மை’ (1 யோவா 5: 6) என்பார் யோவான். எனவே, நாம் தூய ஆவியாரின் வழிநடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.