ஆகஸ்ட் 6 : நற்செய்தி வாசகம்
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின.
இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, “மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
மத்தேயு 16: 13-23
நம்முடைய விருப்பமல்ல, இறை விருப்பம் நிறைவேற உழைப்போம்
நிகழ்வு
‘சிறுமலர்’ என அன்போடு அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா பிரான்ஸ் நாட்டில் உள்ள அலென்கோன் என்ற இடத்தில் 1873 ஆண்டு பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர், இதில் நான்கு பேர் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். இது ஒருபுறம் இருக்க, தெரேசாவிற்கு நான்கு வயது நடக்கும்பொழுது, இவருடைய தாயார் இறந்து போனார். இதனால் இவருடைய தந்தை லூயிஸ்தான் எல்லாரையும் வளர்க்க வேண்டி வந்தது.
பிள்ளைகள் வளர வளர ஒவ்வொருவராகக் கார்மல் சபையில் போய்ச் சேர்ந்தார்கள். தெரேசா மட்டுமே தன் தந்தையோடு இருந்தார். தெரசாவின் தந்தைக்கு வயது ஏறிக்கொண்டு சென்றது. அதேநேரத்தில் அவர் அடிக்கடி நோய்வாய்ப்படவும் செய்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெரேசாவின் தந்தை, ‘தெரேசா என்னோடு இருப்பதால், கடைசிக் காலத்தில் அவர் என்னைப் பார்த்துக்கொள்வார்’ என்ற எண்ணத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில் ஒருநாள் தெரேசா தன் தந்தையிடம் வந்து, “அப்பா! நான் என் மூத்த சகோதரிகளைப் போன்று கார்மல் சபையில் சேர்ந்து, துறவியாகப் போகிறேன்” என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். இது லூயிஸின் மனத்தில் பேரிடியாக இறங்கியது. இருந்தாலும், லூயிஸ் தன்னுடைய மகளின் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல், அவரை அவருடைய மூத்த சகோதரிகளைப் போன்று கார்மல் சபைக்குப் போக அனுமதித்தார்.
தன்னுடைய பிள்ளைகளையெல்லாம் கார்மல் துறவற சபைக்கு அனுப்பிய பின்பு லூயிஸ் தனித்து விடப்பட்டார்; அந்தக் கவலையாலேயே அவர் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது அவர் வாழ்ந்துவந்த பகுதியில் இருந்த மக்களெல்லாம், “பெற்ற பிள்ளைகளையெல்லாம் துறவிமடத்திற்கு அனுப்பிவிட்டு, இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் மனிதரை எங்காவது பார்த்ததுண்டா…?” என்று சாடை மாடையாக அவரைத் திட்டித் தீர்த்தார்கள். இதற்காகவெல்லாம் லூயிஸ் கவலைப்படவில்லை. மாறாக, தான் தன்னுடைய பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றியதன் வழியாகக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன் என நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய விருப்பம் அல்ல, இறை விருப்பம் நிறைவேற உழைக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பாடுகள் படக்கூடாது என விரும்பிய பேதுரு
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கின்றது. முதற்பகுதியில் இயேசு தன்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கின்றார்கள்…சீடர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பதாகவும், இரண்டாவது பகுதியில் இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறையாகத் தன் சீடர்களிடம் எடுத்துச் சொல்வதாகவும் இருக்கின்றது. நாம் நம்முடைய சிந்தனைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியை எடுத்துக்கொள்வோம்.
தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று தன் சீடர்களிடம் சொல்லிவிட்டு, இயேசு அவர்களிடம் தன்னுடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முதன்முறையாக எடுத்துச் சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லி முடித்ததும், பேதுரு இயேசுவைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், “ஆண்டவரே, இது வேண்டாம்” என்கின்றார். பேதுருவின் விருப்பமெல்லாம், மெசியா மக்களை ஆளக்கூடியவர், அப்படிப்பட்டவர் பாடுகள் படக்கூடாது என்பதாகவே இருந்தது. அதனால்தான் இயேசு தன் பாடுகளை முன்னறிவித்த பொழுது, வேண்டாம் என்று சொல்கின்றார்.
இறைத்திருவுளம் நிறைவேற்றிய இயேசு
பேதுரு இயேசுவிடம், பாடுகள் வேண்டாம் என்று சொன்னபொழுது, இயேசு அவரிடம், “என் கண்முன் நில்லாதே சாத்தானே…” என்கின்றார். இயேசு பேதுருவிடம் சொன்ன இந்த வார்த்தைகள், தன்னை நெடுஞ்சாண் கிடையாக வணங்கினாலே போதும்… பாடுகள் படத் தேவையில்லை… உலக அரசுகள் அத்தனையும் தருவதாகச் சொன்ன சாத்தானிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன (மத்4: 8-9). பேதுரு விரும்பியதுபோல் இயேசு பாடுகள் படவில்லை என்றால், அவருடைய பாவம் உட்பட யாருடைய பாவமும் போக்கப்படாது. ஏனெனில், இயேசு இந்த உலகின் பாவம் போக்கவந்த கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29). எனவேதான் இயேசு பேதுருவிடம், “நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்கின்றார்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் பேதுருவைப் போன்று அல்ல, இயேசுவைப் போன்று கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணி, அதன்படி நடக்க முயற்சி எடுக்கவேண்டும். இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தின்படி நடக்கத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ (திபா 40: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் திருப்பாடல் ஆசிரியர் போன்று, இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.