மடுத்திருப்பதிபெருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தொடர்பான இறுதி தீர்மானம் பின்னர் தெரிவிக்கப்படும்

மன்னார் மறைமாவட்டத்தில் எதிர்வரும் 15 ந் திகதி (15.08.2020) நடைபெற இருக்கும் மடு அன்னையின் பெருவிழா தொடர்பான தீர்க்கமான முடிவு தேர்தலுக்குப் பின்பு தீர்மானிக்கப்படும் எனவும் வழமையாக நடைபெறும் விழா காலத்துக்கேற்றவாறு இடம்பெறும் எனவும் அக்காலத்தில் இங்கு வருவோர் விபரங்கள் பதிவுக்கு உட்பட இருப்பதால் அதற்கேற்றவாறு யாத்திரிகர்கள் வரவேண்டும் என்றும் இது விடயமான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மறைமாவட்டதிலுள்ள யாத்திகர் ஸ்தலமான மடுத்திருப்பதி ஆவணி மாதம் பெருவிழா தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் செவ்வாய் கிழம (28.07.2020) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் கலந்துரையாடல் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் இவர்களுடன், கிறிஸ்தவ மத அலுவலகத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி சந்துரி பின்றோ , மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன், மற்றும் மடு பாதுகாப்பு அதிகாரிகள், பொது சௌக்கிய சுகாதார அதிகாரிகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் கொண்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவ் கலந்துரையாடலில் மன்னார் ஆயர் தெரிவிக்கையில் சுகாதார சம்பந்தமான பணிப்புரைக்கு அமைவாக கடந்த ஆடி மாதப் பெருவழாவை கொண்டாடியுள்ளோம்.
இன்றைய நிலையிலும் இந்த சுகாதார கட்டுப்பாடுகள் உள்ளது. எமது மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தது போல் மன்னாரில் தற்பொழுது சுகாதாரம் நல்ல நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.
இதனால் கடந்த ஆடி மாத பெருவிழாவைப் போன்று இவ் ஆவணி மாதப் பெருவிழாவையும் கொண்டாடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இருந்தும் சுகாதார நலன்கருதி இவ் பெருவிழாவுக்கு இலட்சக் கணக்காண பக்தர்கள் வருவதை எவ்வளவோ குறைத்துள்ளோம். கடந்த ஆடி மாதப் பெருவிழாவில் மிக சொற்பபேரே கலந்து கொண்டனர்.
பெருவிழாத் திருப்பலியை வெளியில் வைக்கும் போது மடு ஆலய வளாகம் பரந்து இருப்பதால் பக்தர்கள் சுகாதார இடைவெளியை கவனத்தில் கொண்டு இருக்கக்கூடிய நிலை ஒன்று இருப்பதனால் கடந்த முறையை விட இம்முறை சற்று அதிகம் பேர் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தால் நலமாக இருக்கும்.
கடந்த முறை சொல்லி வந்தவரைவிட சொல்லாமல் வந்தவர்களே அதிகமாக காணப்பட்டனர். ஆகவே இந்த நிலையில் நாமும் இதற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டியுள்ளது.
நாம் கடந்த முறை மடுத் திருப்பதியில் எவரையும் தங்குவதற்கு இட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இருந்தபோதும் வழமைபோன்று இங்கு கூடாரம் அமைத்து இருப்பதற்கான வசதிகளுடன் பலர் வந்திருந்தனர். இவர்கள் பலர் மரங்களுக்கு கீழேயும் தெருக்களிலும் தங்கியிருந்து சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
ஆகவே மடுத் திருப்பதியில் 350 வீடுகள் இருக்கின்றன. இவ் கூட்டத்தில் தெரிவித்ததுபோன்று மரங்களின் கீழ் இருப்பதைவிட இவ் வீடுகளில் தங்க வைப்பது நலம் என தெரிவிக்கப்பட்டது. ஆகவே இது விடயமாகவும் நாம் சிந்திப்பது நலம்.
சென்ற முறை சுகாதார பணிப்பாளரின் அறிவுரைக்கு அமைவாக போக்குவரத்து சேவைகள் சுகாதார செயல்பாடுகள் திறமையாக இருந்தது. அவர்களை பாராட்டுகின்றேன். அத்துடன் பாதுகாப்பும் நலமாக இருந்தது.
ஆகவே இம்முறையும் நாம் இவ்வாறான செயற்பாடுகளை சிந்தித்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.
இவ் விழாவைப்பற்றி இங்கு கலந்துரையாடியபோது தற்பொழுது தேர்தல் காலமாக இருப்பதால் பொலிசார் தேர்தல் பணியில் ஈடுபடுவர். இதனால் பொலிசாரின் பாதுகாப்பும் ஏழாம் திகதிக்கு பின்பே தீர்மானிக்க வேண்டியிருக்கின்றது.
ஆகவே தற்பொழுது இவ் விழா சம்பந்தமாக உடன் தீர்மானிக்க முடியாத நிலை இருக்கின்றபோதும் தேர்தல் முடிந்தபின் நிலமையை கவனத்தில் எடுத்து அதற்குப்பின் கூட்டப்படும் இது சம்பந்தமான கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
எதுவாக இருந்தாலும் இவ் விழாவுக்கான கொடியேற்றம் எதிர்வரும் 6 ந் திகதி இடம்பெற்று வழமைபோன்று 15 ந் திகதி விழா கொண்டாடப்படும்.
இவ் விழா காலத்தில் நாட்டின் சுகாதாரம் மற்றும் நிலமை சுமூகமாக இருக்கும் வேளையில் பக்தர்கள் இங்கு வந்து செல்லும் பட்சத்தில் கட்டாயம் ஒவ்வொருவரும் தங்களை அத்தாட்சிப்படுத்தக்கூடிய விதத்தில் வர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் மடுத்திருப்பதிக்கு வருவோர் ஒவ்வொரு குடும்பத்தரினதும் ஒவ்வொருவரினதும் அடையாள அட்டைகள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் பதிவுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.