இயேசுவின் தூய்மைமிகு இதயம் (ஜூன் 19)

பகைமையை அகற்றி, இதயத்தை அன்பால்
நிறைத்த பெற்றோர்:
1981 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் கொலம்பியாவிற்குச் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செட் பிட்டெர்மன் (Chet Bitterman) என்ற செய்தியாளரை அங்கிருந்த ஒருசில அடிப்படைவாதிகள் (Fundamentalists) தெருவில் இழுத்துப் போட்டு, அடித்துக் கொலைசெய்தார்கள். இதைக் கேள்விப்பட்ட செட் பிட்டெர்மெனின் பெற்றோர் கதறி அழுதனர். தங்களுடைய மகனைக் கொலைசெய்த அந்தக் கயவர்களை இறைவன் தண்டிக்கவேண்டுமென்று மன்றாடினார்கள்.
மாதங்கள் உருண்டோடின. 1982 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் கொலம்பியாவில் கொடியநோய் ஒன்று பரவி, நூற்றுக்கணக்கான மக்கள் அதில் இறந்துபோனார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட செட் பிட்டெர்மனின் பெற்றோர் மகிழ்ச்சியடைவில்லை. மாறாக, அவர்களுக்காக மனம் இரங்கினார்கள்.
பின் தங்களோடு தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, கூடவே ஒரு மருத்துவக் குழுவையையும் கூட்டிக்கொண்டு சென்று, அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தார்கள்; நோயினால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகளையும் பெண்களையும் காப்பாற்றினார்கள். மட்டுமல்லாமல் அம்மக்களின் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் சிலவற்றையும் வாங்கி, இலவசமாகக் கொடுத்தார்கள்.
அப்பொழுது அங்கு வந்த ஒரு மனிதர் செட் பிட்டெர்மனின் பெற்றோரிடம், “இம்மக்கள்களில் ஒருசிலர்தான் உங்களுடைய ஒரே மகனையும் அடித்துக்கொன்றார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு நீங்கள் இவ்வளவு உதவிகளைச் செய்கிறீர்களே?” என்றார். அதற்கு அவர்கள், “தொடக்கத்தில் நாங்கள் இவர்கள்மீது வெறுப்புணர்வோடுதான் இருந்தோம்; ஆனால், கடவுள் எங்களுடைய இதயத்திலிருந்து பகைமையையும் வெறுப்பையும் அகற்றிவிட்டு, மன்னிப்பையும் அன்பையும் பொழிந்திருக்கிறார். இப்பொழுது எங்களுடைய இதயத்தை அன்பால் நிறைந்திருக்கிறது” என்றார்கள்.
தங்களுடைய ஒரே மகனையும் கொன்ற கயவர்களை மன்னித்து, அவர்களுக்காக இதயத்தில் அன்பைத் தேக்கி வைத்திருந்த செட் பிட்டெர்மெனின் பெற்றோர் உண்மையிலேயே நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
இயேசுவின் தூய்மைமிகு இதயப் பெருவிழா:
இன்று திரு அவையானது இயேசுவின் தூய்மைமிகு இதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
இதயம் என்று சொன்னால், அது அன்பின் பிறப்பிடமாக இருக்கின்றது. இந்த மண்ணை, மக்களை வாழ்விக்கக்கூடிய அன்பு அதிலிருந்துதான் பிறப்பெடுக்கின்றது. ஆண்டவர் இயேசு அன்பே உருவானவர். ஆகவே, அவருடைய இதயத்தில் எத்தகைய அன்பு குடிகொண்டிருந்தது என்பதை சிந்தித்துப் பார்த்து, நம்முடைய இதயத்தை அவருடைய இதயமாக்க முயற்சி செய்வோம்.
இயேசுவின் தூய்மை மிகு இதயம்
இரக்கமுள்ள இதயம்:
முதலாவதாக, இயேசுவின் இதயம் இரக்கமுள்ள இதயமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 11 ஆம் அதிகாரம் 29 ஆவது இறைவார்த்தையில் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நான் (இயேசு) கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.” ஆம், இயேசுவின் இந்தக் கனிவு அதாவது இரக்கம் அவருடைய பணிவாழ்வில் பலநேரங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக மக்கள் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தபோது அவர்கள்மீது இரக்கம் கொண்டபோதும், (மத் 9: 36, 15: 32) நோயுற்றுக் கிடந்தவர்களைக் நலப்படுத்தியபோதும் அது அதிகமாக வெளிப்பட்டது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், வருகின்ற காணாமல் போன ஓர் ஆட்டை தேடிச்செல்லும் இரக்கமுள்ள ஆயனாகவும், இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற நலிந்தவற்றை தேற்றுகிற, காயப்பட்டதைக் நலப்படுத்துகின்ற ஓர் ஆயனாகவும் விளங்குகின்றார். இவ்வாறு இயேசுவின் இதயம் இரக்கத்தால் நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை.
இயேசுவின் தூய்மைமிகு இதயம்
மன்னிக்கின்ற இதயம்:
இரண்டாவதாக, இயேசுவின் இதயம் மன்னிக்கின்ற இதயமாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு தவறு புரிந்தபோதும், கடவுள் அவர்களை மன்னித்தது போன்று, ஆண்டவர் இயேசு தனக்கு எதிராகத் தவறு செய்தவர்களையும் மன்னிப்பவராக இருந்தார். லூக்கா நற்செய்தி 23:34 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “தந்தையே! இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.”
இயேசுவின் இதயம் மன்னிக்கூடியதாக இருதயமாக இருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஒருமுறை ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற மறைப்போதகர், தான் நடத்திவந்த நற்செய்தி கூட்டத்தில், இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் தொடர்ச்சியாக கலந்துகொள்வதை கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவரிடம், “எது உம்மை நான் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தூண்டியது?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ மறைப்போதகர் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிப் போதித்து வந்தார். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் நாங்கள் அனைவரும் சேர்ந்து, அவர் போதித்துக் கொண்டிருக்கும்போது தக்காளிப் பழங்களை அவர்மீது வீசியடித்தோம். அவர் எதுவும் சொல்லாமல், தன்மீது வீசப்பட்ட தக்காளிப் பழங்களைச் சேகரித்து, அதிலிருந்து ஜூஸ் தயாரித்து, எங்களுக்குப் பருகக் கொடுத்தார். அதைப்பார்த்து நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்து நின்றோம்.
அப்போதுதான் நான் ஓர் உண்மையை உணர்ந்தேன், ‘ஒரு சாதாரண மறைப்போதகரே, தனக்கு எதிராகத் தீமை செய்பவர்களை மன்னிக்கின்றபோது, கிறிஸ்து எந்தளவுக்கு மன்னிக்கின்றவராக இருப்பார்’ என்பதை. அதிலிருந்து நான் நீங்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இயேசுவை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள முற்படுகின்றேன்” என்றார்.
ஆம், இயேசு பகைவர்களை மன்னிக்கக்கூடிய இதயத்தைக் கொண்டிருந்தார். இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
இயேசுவின் தூய்மைமிகு இதயம்
பிறருக்காகத் தன்னையே தரும் இதயம்:
நிறைவாக, இயேசு தன்னையே பிறருக்காகத் தரும் அன்பின் இதயத்தைக் கொண்டிருந்தார். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோது கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.” ஆம், இயேசு பாவிகளாகிய நமக்காகத் தன்னுடைய உயிரைத் தந்தார். இதில்தான் அவருடைய அன்பு முழுமை பெறுவதாக இருக்கின்றது.

Comments are closed.