நற்செய்தி வாசக மறையுரை (மே 12)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 14: 27-31b
“அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்”
நிகழ்வு
அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அசிசி நகருக்குப் பக்கத்தில் குப்பியோ (Gubbio) என்றோர் இடம் உண்டு. இந்த இடத்தில் கொடியதோர் ஓநாய் இருந்தது. இந்த ஓநாய், மக்கள் தங்களுடைய வீடுகளில் வளர்த்து வந்த செல்லப் பிராணிகள் அந்த வழியாக வந்தபொழுது கடித்துக் குதறியது. மட்டுமல்லாமல், அந்த வழியாக வந்த மனிதர்களையும் அது அச்சுறுத்தி வந்தது.
இதைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுற்றிலும் இருந்த ஊர்மக்கள், அதை ஒரே அடியாக அடித்துக் கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள். இச்செய்தி எப்படியோ பிரான்சிசின் செவிகளை எட்டியது. அவர், ஓநாய் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அதே நேரத்தில் ஓநாய்க்கு உணவு கிடைப்பதற்கும் வழிவகை செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் சிந்தித்தார்.
இதைத் தொடர்ந்து அவர், மக்களிடம் சென்று, “ஓநாயைக் கொல்ல வேண்டாம்; அது உங்களைத் துன்புறுத்தாத வண்ணம் நான் பார்த்துக் கொள்கின்றேன். பதிலுக்கு அதற்கு உணவு கிடைக்க ஏதாவது செய்யவேடும்” என்று சொல்லிவிட்டு, ஓநாயிடம் சென்று, மக்கள் அதனால் படுகின்ற வேதனையை அதனிடம் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அந்த ஓநாயிடம், “சகோதரர் ஓநாயே! இனிமேல் நீ யாரையும் துன்புறுத்தக்கூடாது; பதிலுக்கு உனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து உணவு கிடைக்கும்” என்றார். ஓநாயும் இதற்குச் சம்மதிக்கவே, பிரான்சிஸ் மக்களிடம் சென்று, ஓநாயோடு தான் பேசியதை எடுத்துச் சொல்ல, மக்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். இதனால் ஓநாய்க்கும் மக்களுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை உருவானது (Aiming at Excellence – George Kaitholil. pg. 37).
இன்னோர் இயேசுவாக இப்புவியில் வலம்வந்த அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ், ஓநாய்க்கும் மக்களுக்கும் நடுவே அமைதி ஏற்படுவதற்கு அல்லது அமைதியை விதைப்பதற்கு மேற்கொண்ட முயற்சி வியப்புக்குரியதாகவும் பாராட்டுக்குரியதாகவும் இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்” என்று கூறுகின்றார். இயேசு தரும் அமைதி எத்தகையது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றது அல்ல
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்… நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். இயேசு தரும் அமைதியைப் புரிந்துகொள்வதற்கு முன்னர், இந்த உலகம் தரும் அமைதி எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைக்கு நாடுகளுக்கிடைய அமைதிப் பேச்சு வார்த்தை நடக்கின்றது. அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த பிறகும் நாடுகள் அமைதியாகத்தான் இருக்கின்றனவா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தாக்கும் அபாயகரமான சூழல் நிலவிக்கொண்டிருக்கின்றது. அப்படியானால், இன்றைக்கு உலகில் நிலவும் அமைதி என்பது மேம்போக்கானது; போலியானது; நிரந்தம் இல்லாதது என்பது தெளிவாகின்றது. ஆனால், இயேசு தருகின்ற அமைதி அப்படி அல்ல, அது உண்மையிலும் அன்பிலும் நட்பிலும் சகோதரத்துவத்திலும் உருவானது. அது நீடித்து இருக்கக்கூடியது. அதனால்தான் இயேசு, நான் தரும் அமைதி போன்றது அல்ல என்கின்றார்.
இயேசு தரும் அமைதி, துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தரும்
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என்றால், அது எத்தகைய அமைதி என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு தரும் அமைதி, நமக்குத் துன்பமில்லாத வாழ்வினைத் தந்துவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. மாறாக, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வலுவினையும் ஆற்றலையும் நிச்சயம் தரும். அதில் எந்தவோர் ஐயமுமில்லை.
ஆகையால், இயேசு தரும் உண்மையான, உலகம் தர முடியாத அமைதியைப் பெற்றுக்கொள்ள, நாம் அவருடைய வழியில் நடக்கத் தயாராவோம்.
சிந்தனை
‘அமைதியே கலைகளை வளர்த்து, செழிப்பை உண்டாக்கி, இன்பமான புத்துயிர் அளிக்கும் செவிலித்தாய்’ என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நமக்குச் செழிப்பும் புத்துயிரும் தரும் உண்மையான அமைதி கிடைக்க, நாம் இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.