கோவிட்-19க்கு பலியானவர்களுக்கு நிறைசாந்தி கிடைக்க செபம்

இன்றைய திருப்பலியின் நற்செய்திப் பகுதியை (யோவா.10:22-30) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செல்வத்திற்கு அடிமையாதல், இறுக்கமான மனநிலை, தன்னையே எப்போதும் முன்னிலைப்படுத்தும் போக்கு, சோம்பல், உலகம்சார்ந்த மனநிலை போன்ற, இயேசுவின் ஆடுகளாக நாம் வாழ்வதற்குத் தடையாக இருக்கும் சில எண்ணங்கள் பற்றி விளக்கினார்.

சுதந்திரமின்றி விசுவாசம் கிடையாது, சுதந்திரமின்றி இயேசுவை நோக்கி நம் வாழ்வை நடத்திச் செல்ல முடியாது என்பதையும், மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும் என்று யூதர்கள் கேட்டதற்கு, நான் உங்களிடம் சொன்னேன், நீங்கள்தான் நம்பவில்லை, என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன, ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல (யோவா.10,24-26)” என்ற இயேசுவின் பதில்மொழியை அடிப்படையாக வைத்து, மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் நம்பிக்கை கொள்கிறேனா, இயேசுவாகிய கதவுக்கு முன்னால் நிற்பதற்கு, என்னைத் தடை செய்வது எது? என்பது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு, இந்த நற்செய்திப் பகுதி அழைப்பு விடுக்கிறது என்றுரைத்த திருத்தந்தை, பல்வேறு முற்சார்பு எண்ணங்கள், ஆண்டவர் பற்றிய அறிவில் முன்னோக்கிச் செல்வதற்குத் தடைகளாக உள்ளன என்று கூறினார்.

செல்வத்தால் சிறைப்படுதல்

இந்த எண்ணங்களில் முதன்மையானது, செல்வம் என்றும், நம்மில் பலர், ஆண்டவரின் கதவு வழியாக நுழைந்துள்ளோம், ஆயினும், அதில் நாம் தொடர்ந்து வாழ முடியாமல், செல்வம், நம்மைச் சிறைப்படுத்தி வைத்துள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு, செல்வம் தடையாக உள்ளது என்று கூறினார்.

அப்படியானால் நாம் வறுமைக்கு உட்பட வேண்டுமா? என்று கேட்டால், அது தேவையில்லை, ஆனால், நாம் செல்வத்திற்கு அடிமையாக இருந்துவிடக் கூடாது, ஏனெனில் ஆண்டவர் இயேசுவே, நம் செல்வம் என்றும், ஒரே நேரத்தில் இரு தலைவர்களுக்கு பணிவிடை புரிய முடியாது என்றும், திருத்தந்தை கூறினார்.

கடின இதயத்தால் சுதந்திரம் திருடப்படுகின்றது

நம் நம்பிக்கைக்குத் தடைகளாக இருப்பதில் மற்றொன்று கடின இதயம் என்று குறிப்பிட்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சட்டத்தை விளக்குகையில் இறுக்கமான மனநிலையைக் கொண்டிருந்த, மறைநூல் அறிஞர்களை இயேசு சாடினார் என்றும், இந்த மனநிலை, பிரமாணிக்கமாக இருப்பது அல்ல என்றும் கூறினார்.

எப்போதும் பிரமாணிக்கமாக இருப்பது, கடவுளின் கொடையாகும் என்றும், இறுக்கமான இதயத்தைக் கொண்டிருப்பது, ஒருவரின் தற்காப்பைக் குறிக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, இறுக்கமான மனநிலை, ஆண்டவர் பற்றிய ஞானத்தையும், அழகையும் நம்மிலிருந்து பறித்துக்கொள்கிறது என்றும், அது நம் சுதந்திரத்தைத் திருடுகின்றது என்றும் எச்சரித்தார்.

அக்கறையின்மை, தன்முனைப்பு, உலகியல் உணர்வு

அக்கறையின்மை, அருள்பணியாளர் எப்போதும் தன்னையே முதன்மைப்படுத்தும் போக்கு, உலகியல் உணர்வு ஆகிய மூன்றும், இயேசு பற்றிய அறிவில் நாம் வளருவதற்குத் தடைகளாக உள்ளன என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்கறையின்மை அல்லது புறக்கணிப்பு என்பது, ஒருவிதக் களைப்பாகும், இது, நாம் முன்னோக்கிச் செல்வதற்கு நம்மில் எழுகின்ற ஆசைகளை நம்மிலிருந்து பறித்துக்கொண்டு, நம்மை அரைகுறை ஆர்வமுள்ளவர்களாக ஆக்கி விடுகின்றது என்று, திருத்தந்தை கூறினார்.

அருள்பணியாளர், தன்னையே எப்போதும் முதன்மைப்படுத்தும் போக்கு, இயேசுவாம் நம் தலைவரின் வழிநடத்துதலுக்கு நம்மை அனுமதிக்காமல், அவரின் இடத்தில் நம்மை வைப்பதற்கு முயற்சிக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, இந்த அருள்பணித்துவ போக்கு, ஒருவர் நம்பிக்கை எனும் கதவில் நுழைவதற்கு முன்னரே, அவர்மீது கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றது என்றும், இந்தப் பயங்கரமான நோய், விசுவாசிகளின் சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டு, அவர்கள் இயேசுவிடம் செல்வதைத் தடை செய்கின்றது என்றும் கூறினார்.

மேலும், உலகம்சார்ந்த உணர்வு பற்றியும் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இந்த உணர்வு, நம்மை நம்பிக்கைக் கதவின் முன்னால், தடுத்து நிறுத்தி வைக்கின்றது என்று கூறினார்.

செல்வத்திற்கு அடிமையாதல், கடின இதயம், தன்னையே எப்போதும் முன்னிலைப்படுத்தும் போக்கு, அக்கறையின்மை, கருத்தியல்கள் போன்றவை, நாம் இயேசுவின் மந்தையின் உறுப்பினர்களாக மாறுவதற்குத் தடைகளாக உள்ளன என்று திருத்தந்தை கூறினார்.

சில நேரங்களில், சுதந்திரம், அளவுக்கு அதிகமாகச் செல்லக்கூடும், நாம் தடுக்கி விழக்கூடும், அது உண்மையாயினும், தடுக்கி விழுதல், சுதந்திரமாக மாறுவதற்குமுன் இடம்பெறுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு எனும் கதவு வழியாகச் செல்வதற்குத் தேவையான சுதந்திரத்தை நாம் கொண்டிருப்பதற்காகச் செபிப்போம் என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

Comments are closed.