எளிய மக்களுக்கு மரியாவின் நம்பிக்கை ஊக்கமளிக்கிறது!
அதிகாரத்தால் இயக்கப்படும் உலக வியூகங்களைப் போலன்றி, கிறிஸ்துவின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் திட்டம், ஒன்றிப்பு, அமைதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 31, மாலை 05.மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற புனித கன்னி மரியா கடவுளின் பெருவிழா குறித்த மாலைத் திருப்புகழ் வழிபாட்டில் (First Vespers) வழங்கிய மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கடவுள் மனிதராக மாறியதன் மறையுண்மையையும், மீட்பு வரலாற்றில் கன்னி மரியாவின் முக்கிய பங்கையும் மதிக்கும் இந்த வழிபாட்டுத் தருணத்தின் வளமையையும் வலியுறுத்தினார்.
கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே இறைத்தந்தையின் திட்டமாக இருந்தது (எபே 1:10) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
மனிதகுலத்தை மீட்பதற்காகவும், கடவுளின் நிலைவாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் இயேசு அனுப்பப்பட்டபோது, காலத்தின் முழுமையில் காணப்பட்ட கடவுளின் தெய்வீகத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளின் அழைப்புக்கு மனமுவந்து “ஆம்” என்று கூறியதற்காக மரியாவை பெருமைப்படுத்திய திருத்தந்தை, எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்ட எளிய விசுவாசிகளுக்கு அவருடைய நம்பிக்கை எவ்வாறு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.
Comments are closed.